உ.பி.யில் கொரோனாவால் உயிரிழந்தவரின் சடலத்தை ஆற்றில் தூக்கி வீசும் அவலம்... அதிர்ச்சி வீடியோ!

 
Uttar-Pradesh

கொரோனாவால் உயிரிழந்தவரின் சடலத்தை பாலத்தின் மேல் இருந்து இருவர் ஆற்றில் தூக்கி வீசும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சில நாட்களுக்கு முன்னர் இந்தியாவின் புன்னிய நதியான கங்கையில் நூற்றுக்கணக்கான சடலங்கள் மிதந்து வரும் வீடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தின. உத்தரப்பிரதேச மாநிலத்திலும், அண்டை மாநிலமான பீகாரில் உள்ள கங்கை நதியில் உடல்கள் மிதந்தன, சில உடல்கள் கரையோரம் ஒதுங்கின. நாய் உள்ளிட்ட விலங்கினங்கள் உடல்களை சேதப்படுத்தின. இந்தக் காட்சிகள் நாடு தழுவிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தின.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் உத்தரப்பிரதேசத்தில் இது போன்ற சம்பவம் மீண்டும் ஒரு முறை நடந்துள்ளது. உத்தரப்பிரதேசத்தின் பல்ராம்பூர் மாவட்டத்தில் உள்ள சாலை மேம்பாலம் ஒன்றின் மீது இருந்து கொரோனாவால் உயிரிழந்தவரின் சடலத்தை இருவர் ரப்தி நதியில் தூக்கி எறியும் காட்சி அதில் பதிவாகி உள்ளது.

பிளாஸ்டிக் பையால் மூடப்பட்ட அந்த சடலத்தை பாலத்தின் மீது இருவர் தூக்கி வைக்கின்றனர். அந்த இருவரில் ஒருவர் பாதுகாப்பு கவச உடை அணிந்திருக்கிறார். இந்த வீடியோவை அந்த பாலத்தில் பயணம் செய்த தம்பதியர் காரில் இருந்தவாறு எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியுள்ளனர்.


இது குறித்து விசாரித்த பல்ராம்பூர் சுகாதாரத்துறையினர் இச்சம்பவம் கடந்த 28-ம் தேதி நடந்ததாக கூறுகின்றனர். கடந்த 25-ம் தேதி அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சைப் பலன் அளிக்காமல் 28-ம் தேதி உயிரிழந்தார். அவர் மரணமடைந்ததால் அவரின் உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைத்துள்ளனர். அந்த உடலை அவர்கள் மேம்பாலத்தில் இருந்தவாறு ரப்தி நதியில் எறிந்துள்ளனர்.

இது குறித்து காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டிருப்பதாகவும், தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர்கள் கூறினர்.

கொரோனாவால் உயிரிழந்தோரின் உடல்கள் இறுதிச் சடங்குகள் செய்வதற்காக குடும்பத்தினரிடம், உறவினர்களிடம் வழங்கப்படுகிறது. தகுந்த வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இறுதிச் சடங்குகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அரசு அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது..

From around the web