கொரோனா தடுப்பூசி போட ஆர்வம்..! 1.33 கோடி பேர் முன்பதிவு

 
கொரோனா தடுப்பூசி போட ஆர்வம்..! 1.33 கோடி பேர் முன்பதிவு

18 வயதுக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் திட்டத்தில், ஒரே நாளில் 1.33 கோடிக்கும் அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா பரவலின் 2-ம் அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், அதனை கட்டுபடுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதேசமயத்தில், இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசிகள் போடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதன்படி முன்களப் பணியாளர்கள், வயதானவர்களை அடுத்து தற்போது 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. வருகிற மே 1-ம் தேதிமுதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்தது.

இத்திட்டத்திற்கான முன்பதிவு நேற்று மாலை 4 மணிக்கு கோவின் இணையதளத்தில் தொடங்கியது. முதல் நாளிலேயே ஒரு கோடி 33 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். முதல் 3 மணி நேரத்தில் 80 லட்சம் பேர் கோவின் இணையதளத்தில் விண்ணப்பம் செய்தனர்.

ஒரே நேரத்தில் லட்சக்கணக்கானோர் முன்பதிவுக்காகச் செல்பேசி எண்களை உள்ளிட்டபோது பலருக்கு முதலில் ஓடிபி எண் வரவில்லை என்றும், ஓடிபி எண் வந்து அதை உள்ளிட்டுப் பதிவு செய்தோருக்குத் தடுப்பூசி போடும் நாள் எது எனத் தகவல் வரவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதற்கு விளக்கம் அளித்துள்ள அரசு, தடுப்பூசி மையங்கள், இடம், நேரப் பட்டியலைத் தயாரித்த பின்பே முன்பதிவு செய்தவர்களுக்குத் தேதி ஒதுக்கப்படும் என்றும், கோவின் இணையத்தளம், ஆரோக்கிய சேது செயலி, உமங் செயலி ஆகியவற்றின் மூலம் தொடர்ந்து பதிவு செய்யலாம் எனவும் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

இதனிடையே நாடு முழுவதும் இதுவரை 14 கோடியே 78 லட்சம் பேருக்கு மேல் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும், 57 லட்சத்து 70 ஆயிரம் தடுப்பூசிகளை 3 நாட்களில் மாநிலங்களுக்கு வழங்க இருப்பதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழக அரசு 3-வது கட்ட தடுப்பூசி திட்டத்திற்காக ஒரு கோடியே 50 லட்சம் தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய முடிவு செய்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 27-ம் தேதி வரை 55 லட்சத்து 51 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் பழனிசாமி உத்தரவின் பேரில், ஒரு கோடியே 50 லட்சம் தடுப்பூசிகள் தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகம் மூலமாக கொள்முதல் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

From around the web