பவானிபூர் இடைத்தேர்தலில், முதல்வர் மம்தா பானர்ஜி வெற்றி

 
Mamata

பவானிபூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் முதல்வர் மம்தா பானர்ஜி அமோக வெற்றி பெற்றுள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் நடந்த மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் மம்தா பானர்ஜி தோல்வி அடைந்தார். இருப்பினும், அவர் முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டார்.

6 மாதங்களுக்குள் எம்.எல்.ஏ. ஆக வேண்டும் என்பதால், மம்தா போட்டியிட வசதியாக அவரது சொந்த தொகுதியான பவானிபூரில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ. ராஜினாமா செய்தார். அதையடுத்து, பவானிபூர் மற்றும் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்ட சாம்சர்கஞ்ச், ஜங்கிபூர் ஆகிய தொகுதிகளுக்கு கடந்த இரு தினங்களுக்கு முன் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. பவானிபூர் தொகுதியில் மம்தா பானர்ஜி போட்டியிட்டார்.

இந்நிலையில், பவானிபூர் உள்ளிட்ட 3 தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி 3 அடுக்கு பலத்த பாதுகாப்புடன் இன்று நடைபெற்றது.

தொடக்கத்தில் இருந்தே முன்னிலை பெற்றிருந்த மம்தா பானர்ஜி, வாக்கு எண்ணிக்கை முடிவில் பாஜக வேட்பாளரைவிட 58 ஆயிரத்து 832 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார். இதேபோல் சம்சேர்கஞ்ச், ஜங்கிப்பூர் தொகுதிகளிலும் திரிணாமூல் காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றிபெற்றனர்.

தனது வெற்றி குறித்துப் பேசிய மம்தா பானர்ஜி, வாக்களித்த மக்களுக்கும், ஆறு மாதக் காலத்துக்குள் தேர்தல் நடத்திய ஆணையத்துக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

மம்தா பானர்ஜிக்குத் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். மம்தா பானர்ஜி மீது மேற்கு வங்க மக்கள் மீது வைத்துள்ள அசைக்கமுடியாத நம்பிக்கைக்கு மீண்டும் சான்றளிக்கும் வகையில் இந்தப் பெருவெற்றி திகழ்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.

From around the web