நான் நலமுடன் இருக்கிறேன்... அது வதந்தி: குத்துச்சண்டை வீராங்கனை வீடியோ வெளியீடு!

 
Nisha-Dhaiya

துப்பாக்கிச்சூட்டில் பலியானதாக கருதப்பட்ட குத்துச்சண்டை வீராங்கனை நலமாக உள்ளார் என்பது வீடியோ மூலம் உறுதிபடுத்தப்பட்டது.

அரியானா மாநிலம் சோனேபாட் நகரின் அருகே உள்ள ஹலால்பூரில் அமைந்துள்ள சுஷில் குமார் குத்துச்சண்டை அகாடமியில்  இன்று காலை துப்பாக்கிச்சூடு நடைபெற்றது.

அடையாளம் தெரியாத நபர்களால் நிகழ்த்தப்பட்ட இந்த துப்பாக்கிச்சூட்டில், உள்ளூர் குத்துச்சண்டை வீராங்கனை நிஷா டஹியா மற்றும் அவரது சகோதரர் ஆகியோர் மரணமடைந்தனர்.

‘நிஷா டஹியா’ எனும் அதே பெயரில் பிரதமர் மோடியால் பாராட்டப்பட்ட தேசிய குத்துச்சண்டை வீராங்கனை ஒருவர் உள்ளார். அவர் 23-வயதுக்குட்பட்டோருக்கான உலக குத்துச்சண்டை போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றவர். இந்த டஹியா தான் பலியானதாக நினைத்து பலரும் இரங்கல் செய்தி தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், இந்திய குத்துச்சண்டை அமைப்பு சற்று முன் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது. அதில் டஹியா, தான் கோண்டா பகுதியில் தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டியில் கலந்து கொள்ள வந்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

அவருடன் அந்த வீடியோவில்  2016-ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்ற சாக்‌ஷி மாலிக் அருகில் அமர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சாக்‌ஷி மாலிக் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளதாவது, இந்த நிஷா பத்திரமாக உள்ளார். அது வேற நிஷா என அவர்களுடன் பெல்கிரேடு சென்றுள்ள பயிற்சியாளர் ரந்திர் மாலிக் தெரிவித்துள்ளார். இதன்மூலம், வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

கடந்த வெள்ளிக்கிழமை அன்று பெல்கிரேடில் நடந்த 72 கிலோ எடை பிரிவில், தேசிய வீராங்கனை நிஷா டஹியா  வெண்கலப் பதக்கம் வென்று அசத்தினார். அதற்காக இன்று காலை பிரதமர் மோடி  அவரை பாராட்டி உள்ளார்.அதனிடையே, இவர் தான் அவர் என நினைத்து பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.

துப்பாக்கிச்சூடு நடைபெற்ற அகாடமியின் பயிற்சியாளர்களில் ஒருவர் தான் இந்த சம்பவத்துக்கு காரணம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தனர்.

இறந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளன. பலியான வீராங்கனையின் தாயார் காயங்களுடன் ரோஹ்தக் பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web