உத்தரபிரதேச உள்ளாட்சி தேர்தலில் பத்திரிகையாளரை தாக்கிய ஐஏஎஸ் அதிகாரி!! வைரல் வீடியோ

 
Uttar-Pradesh

உத்தரபிரதேசத்தில் தேர்தலின்போது, பத்திரிகையாளரை ஐஏஎஸ் அதிகாரி கடுமையாக தாக்கி இருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பஞ்சாயத்துகளுக்கு உள்ளாட்சி தேர்தல் நடந்தது. நூற்றுக் கணக்கான பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு நேற்று நடந்த தேர்தலின்போது, பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது. கட்சித் தொண்டர்கள் போலீசாருடன் மோதலில் ஈடுபட்ட நிலையில், பல்வேறு மாவட்டங்களில் தேர்தலின்போது முறைகேடு நடந்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே, 600-க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜக வெற்றி பெற்று இருப்பதாக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். ஆனால், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள், தேர்தலில் முறைகேடு செய்து பாஜக வெற்றி பெற்று உள்ளதாக குற்றம்சாட்டி உள்ளன. அடுத்த ஆண்டு அங்கு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால், உள்ளாட்சி தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், உத்தரபிரதேசத்தில் தேர்தலின்போது, பத்திரிகையாளரை ஐஏஎஸ் அதிகாரி கடுமையாக தாக்கி இருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உன்னோவ் மாவட்ட வளர்ச்சி அதிகாரியாக உள்ள திவ்யன்ஷு பட்டேல், தேர்தல் நடைமுறைகளில் முறைகேடு செய்ததாக கூறப்படுகிறது. இதனை, பத்திரிகையாளர் ஒருவர் வீடியோவாக எடுத்த நிலையில், ஆத்திரமடைந்த ஐஏஎஸ் அதிகாரி பத்திரிகையாளரை கடுமையாக தாக்கி உள்ளார்.

இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நீதிபதி உறுதி அளித்துள்ளார்.


 

From around the web