இந்துத்வா, ஐ.எஸ்., அமைப்பின் கொள்கைகளும் ஒன்றே: புத்தகத்தில் சல்மான் குர்ஷீத் சர்ச்சை

 
Salman-khurshid

காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷீத் தான் எழுதிய புத்தகத்தில் இந்துத்வாவையும், ஐஎஸ் அமைப்பையும் ஒப்பிட்டு எழுதியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் ஒன்றிய அமைச்சருமான சல்மான குர்ஷீத், ‘சன்ரைஸ் ஓவர் அயோத்யா’ என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார்.

இந்தப் புத்தகத்தின் வெளியீட்டு விழா, டில்லியில் கடந்த சில தினங்களுக்கு முன் நடந்தது. புத்தகத்தில் ராமஜன்மபூமி - பாபர் மசூதி விவகாரத்தில், உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை வைத்து, இந்த புத்தகத்தை எழுதி உள்ளார்.

இதில், ‘காவி வானம்’ என்ற தலைப்பில் அவர் எழுதியுள்ளதாவது, சனாதன தர்மம் எனப்படும் இந்து மதம், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் முனிவர்களாலும், துறவிகளாலும் ஏற்படுத்தப் பட்டது. ஆனால், அதன் புனிதத்தை இந்துத்வா கொள்கைகள் சீரழித்துவிட்டன.

Salman-khurshid-books

இந்துத்வாவின் அரசியல் பதிப்பும், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் கொள்கைகளும் ஒன்றே தான். இவ்வாறு அவர் கூறியுள்ளார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து, டெல்லி போலீசில், சல்மான் குர்ஷீத் மீது, வழக்கறிஞர்கள் வினீத் ஜிண்டால், விவேக் கார்க் ஆகியோர் தனித்தனியே புகார் செய்துள்ளனர்.

இதுகுறித்து வழக்கறிஞர்கள் அளித்துள்ள புகாரில், “காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சல்மான் குர்ஷீத், ஐஎஸ் தீவிரவாத அமைப்புகளோடு இந்து மதத்தை ஒப்பீட்டு பேசியுள்ளார். தீவிரவாத அமைப்புகளை சட்டரீதியாக அங்கீகரிக்கும் வகையில் அவரின் கருத்துக்கள் அமைந்துள்ளன.

மேலும் அவரின் கருத்துக்கள் இந்து மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையிலும், இரு பிரிவினர் இடையே மோதலை உருவாக்கும் விதத்தில் அமைந்துள்ளது. நம்முடைய அரசியல் அமைப்பு சட்டத்தின் படி ஒவ்வொரு குடிமகனுக்கும் பேச்சு சுதந்திரம் வழங்கி இருந்தாலும், அதை தவறாக பயன்படுத்தி நாட்டின் ஒற்றுமைக்கும், மரியாதை மரியாதைக்கும் அவமதிக்க கூடாது.

எனவே, அவர் மீது ஜாமீனில் வெளிவரமுடியாத வகையில் ஐபிசி பிரிவு 153, 153ஏ, 298, 505(2) ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளனர்.

From around the web