கர்நாடகாவில் நாளை இரவு முதல் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு!!

 
கர்நாடகாவில் நாளை இரவு முதல் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு!!

கர்நாடகாவில் 14 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

கர்நாடகத்தில் கொரோனா 2-வது அலை அதிவேகமாக பரவி வருகிறது. நேற்று முன்தினம் நிலவரப்படி தினசரி பாதிப்பு 30 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இதில் தலைநகர் பெங்களூருவில் தான் பாதிப்பு அதிகமாக உள்ளது.

இந்தியாவிலேயே பெருநகரங்களில் பெங்களூரு தான் வைரஸ் பாதிப்பில் முதலிடத்தை பிடித்துள்ளது. மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டிவிட்டது.    

கர்நாடகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் இரவு நேர ஊரடங்கு இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரையில் அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் வருகிற 4-ந் தேதி வரை வார இறுதியில் சனி, ஞாயிறு ஆகிய 2 நாட்கள் முழு ஊரடங்கை அரசு அமல்படுத்தியுள்ளது.

இந்நிலையில் கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொட்டு வரும் நிலையில், 14 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார்.

நாளை இரவு 9 மணி முதல் மே 10-ம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டும் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்ய கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்படும். பொது போக்குவரத்து ரத்து செய்யப்படுகிறது எனவும் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

From around the web