உடல்கள் கிடைக்காததால் விரக்தி... கையில் காசு இல்லை... ஆக்ஸிஜன் இணைப்பை துண்டித்த ஆம்புலன்ஸ் டிரைவர்!

 
Telangana

சில நாட்களாக கொரோனா நோயாளிகள் உடல்கள் கிடைக்காததால் தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஆக்சிஜன் இணைப்பை துண்டித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா 2-வது அலை பரவல் காரணமாக நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மத்திய, மாநில அரசுகள் எடுத்த பல்வேறு நடவடிக்கைகளால் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மற்றும் இறந்தவர்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது.

கொரோனாவால் மக்கள் உயிரைக் காக்க அரசுகள் போராடிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் சில தனியார் ஆம்புலன்ஸ் நிறுவனங்கள் கட்டண கொள்ளையில் ஈடுபடுவதாக புகார்கள் வந்தன.

இந்த நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள நிஜாமாபாத் அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அங்கு ஆக்சிஜன் பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்பட்டதால் கடந்த சில நாட்களாக கொரோனாவால் இறக்கும் நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

இந்த நிலையில் உடல்கள்  ஏதும் கிடைக்காமல் விரக்தியடைந்த  தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஒருவர், மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பெறும் நோயாளிகளுக்கு செல்லும் ஆக்சிஜன் சப்ளையை துண்டித்துள்ளார்.

இதனை சரியான நேரத்தில் அங்கு வார்டு பாயாக வேலைப்பார்த்த இளைஞர் ஒருவர் கவனித்து கூச்சலிட்டதோடு, இந்த விபரீத செயலில் ஈடுபட்ட தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநரை போலீசாரிடம் ஒப்படைத்தார். இதனையடுத்து ஓட்டுநரை கைது செய்த போலீசார், அங்கேயே அவரை நன்கு கவனித்தனர். இதற்கிடையே இதில் தொடர்புடைய மேலும் இரண்டு தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.

கொரோனாவினால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு உயிரையும் காக்க, மத்திய மாநில அரசுகள், மருத்துவர்கள், செவிலியர்கள் என அனைவருமே போராடி கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் சிகிச்சைப் பெற்று வரும் நோயாளிகளின் உயிர்க்காக்கும் ஆக்சிஜன் சப்ளையை நிறுத்தி அவர்களது இறப்பில் காசுப் பார்க்க நினைத்த தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்து உள்ளது.

From around the web