முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஹர்ஷவர்தனை பலிகடா ஆக்கினார் பிரதமர் மோடி.. மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம் !

 
Mallikarjun-Kharge

கொரோனா பாதிப்பு விவகாரத்தில் ஹர்ஷவர்தனை பலிகடா ஆக்கிவிட்டார் பிரதமர் மோடி என மல்லிகார்ஜுன கார்கே குற்றம்சாட்டி உள்ளார்.

டெல்லியில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை நேற்று தொடங்கியது.  ஆகஸ்ட் 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது. கூட்டத்தொடர் இன்று 2-வது நாளாக கூடியது.  

பெகாசஸ் உளவு விவகாரம், பெட்ரோல் விலை உயர்வு தொடர்பாக விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் நேற்று கூட்டம் தொடங்கியது முதலே இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து இரு அவைகளும் நேற்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்படுவதாக அவைத் தலைவர்கள் உத்தரவிட்டிருந்தனர்.

கூட்டத்தொடரின் 2-வது நாளான இன்று காலை முதலே எதிர்க்கட்சிகள் மக்களவையில் அமளியில் ஈடுபட்டதால் அவையை பிற்பகல் 2 மணிவரை தலைவர் ஓம் பிர்லா ஒத்திவைத்தார். பின்னர் சபை கூடியதும் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் மத்தியில் மக்களவை நடவடிக்கைகள்  பிற்பகல் 3 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன.

அதேபோல, மாநிலங்களவையிலும் அமளி ஏற்பட்டதால் பிற்பகல் 12 மணிவரை அவையை ஒத்திவைத்தனர். மீண்டும் கூட்டம் தொடங்கியதும் எதிர்க்கட்சிகள் அமளியால்  மாநிலங்களவை பிற்பகல் 1 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பிற்பகல் 1 மணிக்கு கொரோனா தொடர்பான விவாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் 1 மனிக்கு மேல் எதிர்கட்சிகளின் அமளிக்கு மத்தியில் மாநிலங்களவை நடைபெற்றது. காகிதங்களை கிழித்தெறிந்து பதாகைகளை ஏந்தியும் எதிர் கட்சிகளை சேர்ந்தவர்கள் தொடர்ந்து கடும் அமளியில் ஈடுபட்டனர்.

எதிர்கட்சியினரின் தொடர் அமளியால் மாநிலங்களவை மீண்டும் மதியம் 1.34 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் மாநிலங்களவை மூன்றாவது முறையாக மாலை 4 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அமளிக்கு மத்தியில் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே  அவையில் பேசும் போது கூறியதாவது,

டாக்டர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் உள்பட கொரோனாவுக்கு எதிராக போராடுபவர்களுக்கு மரியாதை செலுத்துகிறேன். டெல்லியில் கொரோனா 2-ம் அலையின்போது மற்றவர்களுக்கு ஆக்சிஜன் விநியோகம், பிளாஸ்மா தானம் செய்து உதவியர்களை நான் வணங்குகிறேன்.

முக கவசம் அணிந்து சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என அரசு மக்களைக் கேட்டுக்கொண்டது. ஆனால் பல மாநில தேர்தலில் அவர்கள் என்ன செய்துகொண்டிருந்தார்கள். உங்களது விதமுறைகளை நீங்களே மீறுகிறீர்கள். கொரோனா நெறிமுறைகளைப் பின்பற்றாததற்காக அவர்களைப் பாராட்ட வேண்டும்.

பாத்திரங்களை தட்டச் சொல்லியும், மெழுகுவர்த்தியை ஏத்தச் சொல்லியும் மக்களை பிரதமர் கேட்டுக்கொண்டார். மக்களும் அவரை நம்பி அனைத்தையும் செய்தனர். ஆனால், அவர் தனது வாக்குறுதியை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றிவிட்டார். இதற்கான பழியை தான் ஏற்றுக்கொள்ளாமல் சுகாதாரத் துறை அமைச்சரை (ஹர்ஷவர்தன்) பலிகடா ஆக்கிவிட்டார் என கூறினார்.

From around the web