முன்னாள் ஒன்றிய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ஆஸ்கர் பெர்னாண்டஸ் காலமானார்..!

 
Oscar-Fernandes

இந்திய தேசிய காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் ஒன்றிய அமைச்சருமான ஆஸ்கர் பெர்னாண்டஸ் இன்று காலமானார். அவருக்கு வயது 80.

இந்திய தேசிய காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் ஒன்றிய அமைச்சருமான ஆஸ்கர் பெர்னாண்டஸ் இன்று  மதியம் மங்களூரு யெனெபோயா மருத்துவமனையில் காலமானார்.

கடந்த ஜூலை மாதம் மூளையில் இருந்து இரத்தக் கட்டியை அகற்ற அறுவை சிகிச்சை செய்த முன்னாள் அமைச்சர் பெர்னாண்டஸ், தனது வீட்டில் யோகா பயிற்சி செய்யும் போது தலையில் காயம் ஏற்பட்டு மங்களூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். இதனையடுத்து,அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஆஸ்கர் பெர்னாண்டஸ், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உட்பட அவர்களது குடும்பத்தின் நெருங்கிய நண்பர்களில் ஒருவராகத் திகழ்ந்தார். ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தில், மன்மோகன் சிங்கின் அமைச்சரவையில், ஒன்றிய போக்குவரத்து சாலை மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புக்கான அமைச்சராக பதவி வகித்துள்ளார்.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளராகவும் பதவி வகித்துள்ள ஆஸ்கர் பெர்னாண்டஸ், காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் ஆணையத்தின் தலைவராகவும் இருந்தார். மறைந்த பிரதமர் ராஜிவ் காந்தியின் பாராளுமன்ற செயலாளராகவும் பணியாற்றினார்.

From around the web