விவசாயிகள் மீது கார் ஏற்றிய ஒன்றிய அமைச்சரின் மகன் நேபாளத்துக்கு தப்பிச் சென்றாரா?

 
Ashish-Mishra

ஓன்றிய அமைச்சரின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா நேபாளத்துக்குத் தப்பிச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் லகிம்பூர் கேரி மாவட்டத்தில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது பாஜகவினர் சென்ற கார் மோதியது. இதில், சில விவசாயிகள் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையில் மொத்தம் 4 விவசாயிகள், ஒரு பத்திரிக்கையாளர் உள்பட 8 பேர் உயிரிழந்தனர்.

விவசாயிகள் மீது மோதிய காரில் ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா இருந்ததாக கூறப்படுகிறது. இந்த வன்முறை சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.

இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய ஒன்றிய அமைச்சரின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா உட்பட 13 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இரண்டு பேரை மட்டுமே உத்தர பிரதேச போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இன்று விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என உத்தர பிரதேச போலீஸ் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு சம்மன் அனுப்பிருந்தது.

ஆனால் அவர் இதுவரை விசாரணைக்கு ஆஜராகவில்லை என தகவல் வெளிவந்துள்ளது. அவரது கைபேசியை போலீசார் கண்காணித்தபோது உத்தர பிரதேசம் - நேபாள எல்லையில் அவர் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து நேபாள எல்லையில் உள்ள போலீசாருக்கு இதுதொடர்பாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அவரை தேடுவதற்கான குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும் உச்சநீதிமன்றத்தில் லக்கிம்பூர் கலவரம் தொடர்பாக விசாரணை நடைபெற்றது. இதில் இதுவே வேறு குற்றவாளியாக இருந்தால் இப்படித்தான் சம்மன் அனுப்பி விசாரணை நடத்துவீர்களா? மற்ற குற்றவாளிகளை எப்படி அரசு நடத்துமோ அதேபோல் இந்த வழக்கிலும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதிரடியாகத் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் போலீசார் சம்மன் அனுப்பியும் இதுவரை ஆஷிஷ் மிஸ்ரா விசாரணைக் குழுவின் முன்பு ஆஜராகவில்லை என்றும் நேபாளத்துக்குத் தப்பி சென்றுவிட்டார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து சம்யுக்தா கிசான் மோர்ச்சா வெளியிட்ட அறிக்கையில், ஆஷிஷ் மிஸ்ராவை போலீசாரால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. தொடர்ந்து தனது இருப்பிடத்தை மாற்றி வருகிறார். போலீசார் அவரைக் கைது செய்யாதது அதிர்ச்சியளிக்கிறது எனத் தெரிவித்துள்ளது.

From around the web