கொரோனா தடுப்பூசி கையிருப்பு தரவுகளை பொதுத்தளத்தில் பகிரக்கூடாது... மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு உத்தரவு

 
Vaccine

கொரோனா தடுப்பூசி கையிருப்பு தரவுகளை பொதுத்தளத்தில் பகிரக்கூடாது என மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு கடிதம் எழுதியுள்ளது.

மாநில அரசுகள் தங்களிடம் உள்ள அனைத்து தடுப்பூசிகளின் கையிருப்பு மற்றும் அவற்றின் விநியோகம் குறித்த தகவல்களை ஒன்றிய அரசிடம் தெரிவிக்க வேண்டும். அதேபோல், ஐக்கிய நாடுகள் மேம்பாட்டு திட்டத்தின் உதவியுடன் இந்தியாவில் செயல்படும் மின்னணு தடுப்பூசி நுண்ணறிவு வலையமைப்பு (இவின் - eVIN) என்ற முறையும் தடுப்பூசி பற்றிய அப்டேட்களுக்கு பயன்படுகிறது.

2012-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இவின் இணையதள தடுப்பூசி நுண்ணறிவு வலைதள அமைப்பில் நாடு முதல் மாவட்டம் வரையில் அனைத்து மட்டத்திலும் உள்ள தடுப்பூசி கையிருப்பு, அவை சேமித்து வைக்கப்பட்டிருக்கும் தட்பவெப்பநிலை போன்ற தரவுகள் இடம்பெற்றுள்ளது. ஒன்றிய அரசுக்கு சொந்தமான இவின் இணையதள பக்கத்தில் உள்ள அந்த தரவுகளை பொதுவெளியில் அனைவரும் பார்த்துக்கொள்ளலாம்.

கொரோனா தடுப்பூசி தொடர்பான தரவுகளும் இவின் இணையதள பக்கத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த தரவுகள் மாநில அரசுகளால் தினசரி அப்டேட் செய்யப்படுகின்றன.

இந்நிலையில், தடுப்பூசி கையிருப்பு தொடர்பான தரவுகளை பொதுவெளியில் வெளியிட வேண்டாம் என மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக, “மாநில, யூனியன் பிரதேச அரசுகளுக்கு ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் கடந்த 4-ம் தேதி எழுதியுள்ள கடிதத்தில், மின்னணு தடுப்பூசி நுண்ணறிவு வலையமைப்பில் கொரோனா தடுப்பூசி கையிருப்பு மற்றும் விநியோகத்தை மாநில, யூனியன் பிரதேச அரசுகள் தினசரி பதிவிட்டு வருகின்றன.

ஒன்றிய அரசுக்கு சொந்தமான இணையதளபக்கத்தில் பதிவிடப்படும் கொரோனா தடுப்பூசி கையிருப்பு, விநியோக தரவுகளை மாநில அரசுகள் ஒன்றிய அரசின் ஒப்புதல் இன்றி வேறு எந்த அமைப்புடனோ, ஊடகத்திடமோ, இணையதளத்திலோ, பொதுவெளியிலோ வெளியிடக்கூடாது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

மாநில அரசுகள் சேமித்து வைத்துள்ள தடுப்பூசிகளின் தட்பவெப்பநிலை, கையிருப்பு அளவு உள்ளிட்ட தரவுகளை தனியார் அமைப்புகள்/நிறுவனங்கள் தெரிந்துகொள்ளக்கூடாது என்பதற்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

From around the web