18 வயதுக்கு மேற்பட்டோர் கொரோனா தடுப்பூசி... ஆன்லைன் பதிவு இன்று மாலை 4 மணிக்குத் தொடங்கும்

 
18 வயதுக்கு மேற்பட்டோர் கொரோனா தடுப்பூசி... ஆன்லைன் பதிவு இன்று மாலை 4 மணிக்குத் தொடங்கும்

18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான முன்பதிவு இன்று மாலை 4 மனிக்கு தொடங்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவலின் 2-ம் அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், அதனை கட்டுபடுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதேசமயத்தில், இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசிகள் போடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதன்படி முன்களப் பணியாளர்கள், வயதானவர்களை அடுத்து தற்போது 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. வருகிற மே 1-ம் தேதிமுதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்ட் ஆகிய இரண்டு வகை தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. இதனை பெறுவதற்காக ‘கோவின்’ இணையதளம்  அல்லது ‘ஆரோகிய சேது’ செயலி மூலமாக பொதுமக்கள் முன்பதிவு செய்து கொள்ள முடியும்.

இந்த நிலையில் வரும் மே 1-ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கு, இன்று முதல் இணையதளம் மூலமாக முன்பதிவு செய்யலாம் என மத்திய அரசு அறிவித்தது.

இந்நிலையில் இணையதளம் மூலமாக முன்பதிவு செய்ய முடியவில்லை என புகார் எழுந்தது. நேற்று நள்ளிரவு முதல் பலர் முன்பதிவு செய்ய முயற்சி செய்தால், இணையதள சர்வரில் முடக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து மத்திய அரசு தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இன்று மாலை 4 மணி முதல் கொரோனா தடுப்பூசிக்கான முன்பதிவு தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

From around the web