2-டிஜி கொரோனா மருந்து தயாரிக்க விருப்பம் உள்ள நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்..! டிஆர்டிஓ அறிவிப்பு

 
DRDO

கொரோனா சிகிச்சை இணை மருந்தான 2-டிஜி மருந்தை, பெருமளவில் தயாரிக்க விருப்பம் உள்ள நிறுவனங்களிடம் இருந்து அதற்கான விண்ணப்பங்களை வரவேற்பதாக டிஆர்டிஓ அறிவித்துள்ளது.

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டிஆர்டிஓ) ஆய்வகமான இன்ஸ்டிடியூட் ஆப் நியூக்ளியர் மெடிசின் அண்ட் அலையட் சயின்சஸ் (ஐ.என்.எம்.ஏ.எஸ்) ஐதராபாத்தின் டாக்டர் ரெட்டியின் ஆய்வகங்களுடன் இணைந்து 2-டியோக்ஸி-டி-குளுக்கோஸ் (2-டிஜி) என்ற  மருந்தை உருவாக்கியுள்ளது.

2-டியோக்ஸி-டி-குளுக்கோஸ் என்ற புதிய மருந்துக்கு, இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கிய நிலையில், பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கடந்த 17-ம் தேதி மத்திய அரசு அறிமுகம் செய்தது. முதலில் 10 ஆயிரம் பாக்கெட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

இந்நிலையில் கொரோனா சிகிச்சை இணை மருந்தான 2-டிஜி மருந்தை, பெருமளவில் தயாரிக்க விருப்பம் உள்ள நிறுவனங்களிடம் இருந்து அதற்கான விண்ணப்பங்களை வரவேற்பதாக டிஆர்டிஓ அறிவித்துள்ளது.

அப்படி ஆர்வம் தெரிவிக்கும் நிறுவனங்களில் மொத்தம் 15 இந்திய மருந்து நிறுவனங்களுக்கு மட்டும் இந்த மருந்து தயாரிப்புக்கான தொழில்நுட்பம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

2-டியோக்ஸி-டி-குளுக்கோஸ் என்ற பவுடர் வடிவிலான இந்த மருந்து, கொரோனா நோயாளிகள் விரைவாக குணமடையவும், மருத்துவ ஆக்சிஜன் தேவையை குறைக்க உதவும் என கிளினிகல் சோதனைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. 2-டிஜி மருந்துக்கு தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர் அவசரகால பயன்பாட்டுக்கான அனுமதியும் வழங்கி உள்ளார்.

From around the web