நகைச்சுவை பேச்சாளர் வீர் தாஸ் சர்ச்சை பேச்சு; அமைச்சர் எதிர்ப்பு!

 
Vir-das

நகைச்சுவை பேச்சாளர் வீர் தாஸ் கருத்துக்கு மத்தியபிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஷ்ரா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

நகைச்சுவை பேச்சாளர் வீர் தாஸ் உலக அளவில் பல்வேறு நாட்டைச் சேர்ந்த பார்வையாளர்கள் வீற்றிருக்கும் நகைச்சுவை அரட்டை அரங்கத்தில் சமீபத்தில் பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

‘இரண்டு இந்தியாவிலிருந்து நான் வந்துள்ளேன்’ என்று குறிப்பிட்டு வீர் தாஸ் பேசியுள்ளார். அதனுடன் சேர்த்து நாட்டின் முக்கிய பிரச்சினைகள், கொரோனாவை எதிர்த்து போராடிய விதம், பாலியல் வன்கொடுமைகள், விவசாயிகள் மற்றும் நகைச்சுவை பேச்சாளர்களின் மீது உள்ள அடக்குமுறை’ போன்ற விஷயங்களையும் பேசியுள்ளார்.

இந்த சர்ச்சை வீடியோ தொடர்பாக பாஜகவை சேர்ந்த செய்தித் தொடர்பாளர் ஆதித்யா ஜா காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். இதற்காக வீர்தாஸ் பல்வேறு பிரிவுகளில் இருந்து கண்டனங்களைப் பெற்றார். நடிகை கங்கனா ரணாவத் உட்பட பலர் அவருடைய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனிடையே மத்தியபிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஷ்ரா இன்று தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். அவர் தெரிவித்துள்ளதாவது,

“இதுபோன்ற கேலி பேச்சாளர்களை அனுமதிக்கமாட்டோம். அவர் மன்னிப்பு கேட்டால் அதை பற்றி யோசிப்போம்” என்று  தெரிவித்துள்ளார்.

இந்தியாவை இழிவுபடுத்த முயலும் கேலி பேச்சாளர்கள் என்று குறிப்பிட்டுள்ள அவர், மத்தியபிரதேசத்தில் வீர் தாஸ் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியாது என்று எச்சரிக்கை மணி அடித்துள்ளார்.

முன்னதாக, வீர் தாசுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபல், சசி தரூர் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் மஹுவா மொய்த்ரா உட்பட பலர் ஆதரவு தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், ‘இந்தியாவை இழிவுபடுத்தும் இதுபோன்ற கேலி பேச்சாளர்களுக்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்கிறது’ என்றும் மிஷ்ரா  குற்றம்சாட்டியுள்ளார்.

From around the web