அமேசான் மூலம் கஞ்சா கடத்தல்? விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்தால்.. வார்னிங் கொடுத்த அமைச்சர்

 
Narottam-Mishra

அமேசான் நிறுவனம் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்தால் கடும் விளைவுகள் ஏற்படும் என்று மத்திய பிரதேச அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து அமேசான் ஆன்லைன் மூலம் 1,000 கிலோ கஞ்சா அண்மையில் கடத்தப்பட்டு 3 மாநிலங்களுக்கு விநியோகிக்கப்பட்டது என்பது குற்றச்சாட்டு. இந்த கஞ்சா கடத்தல் கும்பலை மத்திய பிரதேச போலீசார் மடக்கி பிடித்துள்ளனர்.

இந்த விவகாரம் குறித்து உரிய விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக அமேசான் நிறுவனம் தெரிவித்திருந்தது. சட்டங்களுக்குபட்டே தங்களது நிறுவனம் சேவைகளை வழங்கி வருகிறது என்றும் அமேசான் கூறியிருந்தது. கருவேப்பிலை எனக் கூறி கஞ்சாவை அமேசான் மூலம் அகமதாபாத் நிறுவனம் ஒன்று கடத்தி வந்ததும் தெரியவந்தது.

இது தொடர்பாக பிந்த் போலீஸ் அதிகாரி மனோஜ் குமார் சிங் கூறுகையில், அகமதாபாத்தில் 2007-ம் ஆண்டு ஜவுளி நிறுவனம் என்ற பெயரில் பாபு டெக்ஸ் பிரைவேட் லிமிடெட் பதிவு செய்திருக்கிறது. இதுதான் கருவேப்பிலையை காயவைத்து அனுப்புவதாக கூறி கஞ்சா கடத்தலில் ஈடுபட்டு வருகிறது.

இது தொடர்பாக தகவல் கிடைத்ததும் போலீசார் நடத்திய சோதனையில் அமேசான் நிறுவனத்துக்கு பேக்கிங் செய்யப்பட்ட நிலையில் கஞ்சா கடத்த இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது பறிமுதல் செய்யப்பட்டது. அமேசான் நிறுவனம் பல்வேறு இலைகளின் பெயரால் கஞ்சா கடத்தலில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது என்றார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து விசாரணைக்காக அமேசான் நிறுவனம் கடந்த திங்கள்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் ஆஜராவதாக கூறியிருக்கிறார்.

ஆனால் இதுவரை அமேசான் நிர்வாக அதிகாரிகள் ஆஜராகவில்லை என்கிறார் மத்திய பிரதேச அமைச்சர். ஆனால் அமேசான் நிறுவனமோ, நாங்கள் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தர தயாராக இருக்கிறோம் என்கிறது.

மத்திய பிரதேச அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா மேலும் கூறுகையில், அமேசான் நிறுவனத்துக்கு மத்திய பிரதேச போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். ஆனால் இந்த சம்மனை மதிக்காமல் அமேசான் நிறுவனம் இருந்து வருகிறது. இந்த நிலை தொடர்ந்தால் அமேசானின் விற்பனைக்கான ஒழுங்குமுறைகளை மத்திய பிரதேச அரசே கொண்டுவர நேரிடும் என்றும் எச்சரித்துள்ளார்.

From around the web