தொகுதி மேம்பாட்டு நிதி 3-வது ஆண்டாக நிறுத்திய ஒன்றிய அரசு.! குமுறும் எம்.பிக்கள்

 
Lok-Sabha

நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதி 3வது ஆண்டாக முடக்கப்பட உள்ளது. இதனால் தொகுதியில் நலத்திட்டங்கள் எதுவும் செய்ய முடியவில்லை என்பது எம்.பி.க்களின் குமுறலாக உள்ளது.

கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020-மு ஆண்டு மார்ச் 24-ந் தேதி முதல் தேசிய ஊரடங்கை அமல்படுத்தினார் பிரதமர் மோடி. கொரோனா வைரஸ் பெரிய அளவில் இந்தியாவை தாக்கத் துவங்கியது.

ஒன்றிய அரசின் கஜானா முழுவதும் கொரோனா பரவல் தடுப்பு, ஒழிப்பு , மக்களை பாதுகாத்தல் என்ற மருத்துவ கட்டமைப்பிற்காகவே செலவிட வேண்டியதிருந்தது. இதனால், மக்களுக்கான சமூக பாதுகாப்பு திட்டங்கள் உள்ளிட்ட பொது திட்டங்களுக்கான நிதி கட்டமைப்பில் பெரிய அடி விழுந்தது.

அதற்காக, பல்வேறு வழிகளில் நிதி திரட்ட முடிவு செய்த பிரதமர் மோடி, எம்.பி.க்களின் தொகுதி வளர்ச்சிக்கான நிதியில் கை வைத்தார். அதாவது, ஒவ்வொரு நாடாளுமன்ற தொகுதிக்கும் அதன் வளர்ச்சிக்காக ஒரு வருடத்துக்கு 5 கோடி ரூபாய் ஒன்றிய அரசு ஒதுக்குகிறது. அந்த தொகுதி நிதி 2 ஆண்டுகளுக்கு கிடையாது என அறிவித்தது.

இதன் மூலம் 7,800 கோடி ரூபாய் அரசின் கஜானாவில் சேர்க்கப்பட்டது. கொரோனா ஒழிப்பின் மருத்துவ தேவைகளுக்காக அந்த நிதி செலவிடப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. அந்த 2 ஆண்டு காலக்கெடு வருகிற மார்ச் மாதத்துடன் முடிவடைகிறது. ஆனால், நிதி நிலைமை சரியாகாததால் மேலும் 1 ஆண்டுக்கு (2022-23 ) எம்.பி.க்களின் தொகுதி நிதியை கட் செய்ய ஒன்றிய நிதியமைச்சகத்துடன் பிரதமர் அலுவலகம் விவாதித்திருக்கிறதாம். ஒரு வருடம் நீட்டிப்பதன் மூலம் 3,900 கோடி ரூபாய் கிடைக்கும் என திட்டமிட்டப்படுகிறதாம்.

ஏற்கனவே, நாடாளுமன்ற தொகுதி நிதி 2 வருடங்களுக்கு பிடித்தம் செய்யப்பட்டதால் தொகுதிக்காக எதையுமே செய்ய முடியவில்லை என எம்.பி.க்கள் குரல் கொடுத்து வருகின்றனர். தற்போது மேலும் 1 ஆண்டு நீட்டிக்க ஒன்றிய அரசு முடிவு செய்தால் அது மக்களுக்கு செய்கிற அநியாயம் என்கிற குரல் எம்.பி.க்கள் மத்தியில் இருக்கிறது.

From around the web