கொரோனாவுக்கு எதிராகப் போராடும் மருத்துவர்களுக்கு பாரத ரத்னா விருது!! டெல்லி முதல்வர் வலியுறுத்தல்

 
Arvind-Kejriwal

கொரோனாவுக்கு எதிராக போராடும் மருத்துவர்களுக்கு இந்த ஆண்டு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா 2-வது அலை பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. இதற்காக தனது குடும்பங்களை விட்டு மருத்துவர்கள், செவிலியர்கள், பாராமெடிக்கல் பணியாளர்கள் ஆகியோர் போராடி வருகிறார்கள்.

இந்நிலையில் கொரோனாவுக்கு எதிராக போராடும் மருத்துவர்களுக்கு இந்த ஆண்டு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என கெஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், “கொரோனாவுக்கு எதிராகப் போராடி வரும் அனைத்து மருத்துவர்கள், செவிலியர்கள், பாராமெடிக்கல் பணியாளர்கள் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும். கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர்களுக்கு நாம் செய்யும் உண்மையான அஞ்சலி இதுவேயாகும்.

இதுதான் தங்களின் குடும்பத்தினரையும், உயிரையும் கருதாமல் மக்களுக்காகப் பணியாற்றும் மருத்துவர்களுக்குச் செய்யும் உண்மையான மரியாதையாக அமையும். இதற்கு ஒட்டுமொத்த தேசமும் மகிழ்ச்சி அடையும்” எனப் பதிவிட்டுளார்.

From around the web