சீறும் வங்கத்துப் பெண் புலி! மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் “லேடியா? மோடியா?”

 
Mamata-Modi

2014ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் இந்த லேடியா? அந்த மோடியா? என்று கர்ஜித்தார் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா. இந்தியா முழுவதும் எதிரொலித்தது அந்தக்குரல். நாடு முழுவதும் பரவலாக வெற்றி பெற்றார் மோடி. திமுக, அதிமுக, காங்கிரஸ் தவிர மற்ற கட்சிகளை கூட்டணியில் சேர்த்துக் கொண்ட போதும். தமிழ்நாட்டில் இரண்டு தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றார்.  தனித்துப் போட்டியிட்ட ஜெயலலிதா மாபெரும் வெற்றியைப் பெற்றார்.

ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு லேடியா? மோடியா? போட்டி உருவெடுத்துள்ளது. வங்கத்துப் பெண் புலி என்று அழைக்கப்படும் மேற்கு வங்காள முதலமைச்சரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி பிரதமர் மோடிக்கு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளார்.

சட்டமன்றத் தேர்தலில் தோல்வியுற்ற பாஜக, தொடர்ந்து மமதா பானர்ஜிக்கு இடைஞ்சல் கொடுத்து வந்தது. யாஸ் புயல் பாதிப்பு குறித்து முதலமைச்சருடன் பிரதமர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்ட போது, பாஜக எம்.எல்.ஏவையும் அந்தக் கூட்டத்திற்கு அழைத்ததால், 30 நிமிடம் தாமதமாக வந்தார் மமதா பானர்ஜி. தன்னுடைய விளக்கத்தைச் சொல்லிவிட்டு, யாஸ் புயல் பாதிப்பு தொடர்பான ஆவணங்களை ஒப்படைத்து விட்டு சென்றுவிட்டார்.

பிரதமர் மோடி, ஆளுநர் ஜக்தீப் தாங்கர் 30 நிமிடம் காத்திருந்தாலும், மேற்கொண்டு கூட்டத்தில் பங்கேற்காமல் சென்று விட்டார் மமதா பானர்ஜி. இதையடுத்து தலைமைச் செயலாளரை மத்திய அரசுப் பணிக்கு திரும்ப அழைத்தது பாஜக அரசு. 3 மாதம் பணி நீட்டிப்பு கொடுத்திருந்த போதிலும் மே 31ம் தேதி பதவியை ராஜினாமா செய்து விட்டு முதலமைச்சரின் சிறப்பு ஆலோசகர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார் அலபன் பந்தோபத்யா.

ஒன்றிய, மாநில அரசுகளுக்கு இடையே உரசல்கள் ஏற்பட்ட நிலையில், “ மோடி என்னை அழிக்க நினைத்தால் அது ஒரு போதும் நடக்காது. மக்கள் ஆதரவு இருக்கும் வரையிலும் மோடியால் ஒன்றும் செய்ய முடியாது. அனைத்துக் கட்சியினரும், ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் ஒன்று திரளவேண்டும்,” என்று குரல் கொடுத்துள்ளார் மமதா பானர்ஜி.

2024ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் மம்தா பானர்ஜியா? நரேந்திர மோடியா? என்ற சூழலை நோக்கி நகர்வதாகத் தெரிகிறது. மீண்டும் லேடியா? மோடியா? என ஜெயலலிதாவின் குரலை மம்தா பானர்ஜி கர்ஜித்தாலும் ஆச்சரியப்பட வேண்டியதில்லை

From around the web