84 வயதில்... 11 முறை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டு தப்பிய முதியவர்; 12-வது முறை சிக்கினார்..!

 
Brahamdev-Mandal

84 வயது நிரம்பிய முதியவர் 11 முறை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ள சம்பவம்  சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம் மதிபுரா மாவட்டம் ஓரை கிராமத்தை சேர்ந்தவர் பிரமோதிய மண்டல். 84 வயதான இவர் அஞ்சல் துறையின் பணியாற்றி ஒய்வு பெற்றவர் ஆவார். இவர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் தற்போது வரை 11 முறை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளார்.

மார்ச், மே, ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் என அடுத்தடுத்து இவர் தடுப்பூசி செலுத்திகொண்டுள்ளார். பல முறை இவர் தனது ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களை கொண்டு கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளார். வெவ்வேறு தருணங்களில் தனது செல்போன் எண், மனைவி, உறவினர்களின் செல்போன் எண்களை கொண்டு தடுப்பூசி செலுத்த பதிவு செய்துள்ளார்.

கடந்த டிசம்பர் 30-ம் தேதி 11-வது முறை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டதாக பிரமோதிய மண்டல் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பிரமோதிய மண்டல் 12-வது முறையாக தடுப்பூசி செலுத்திக்கொள்ள தனது கிராமத்திற்கு அருகே உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நேற்று சென்றுள்ளார். அப்போது, அவரது ஆவணங்களை சோதித்த சுகாதாரத்துறை ஊழியர்கள் மண்டல் ஏற்கனவே தடுப்பூசி செலுத்தியுள்ளார் என்பதை கண்டுபிடித்தனர்.

இது குறித்து சுகாதாரத்துறையினர் அவரிடம் கேட்டபோது, தான் ஏற்கனவே 11 முறை தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளதாகவும், இது தனக்கு 12-வது கொரோனா தடுப்பூசி எனவும் கூறு சுகாதாரத்துறை பணியாளர்கள் அதிர்ச்சியளித்துள்ளார். மேலும், ஒவ்வொரு முறை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளும்போதும் ‘சிறப்பாக உணருகிறேன்’ என்றும் கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து அவருக்கு தடுப்பூசி செலுத்த மறுத்த சுகாதாரப்பணியாளர்கள் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அதன் பின்னர் 84 வயதான முதியவர் பிரமோதிய மண்டல் 11 முறை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டது உண்மைதானா? என்பது குறித்து விசாரிக்க மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

பிரமோதிய மண்டலுக்கு 11 முறை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது உண்மை என்பது உறுதியானால் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

From around the web