பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்து 5 ஆண்டு நிறைவு: ஒன்றிய அரசை கடுமையாக சாடிய காங்கிரஸ்!

 
Demonetisation

பண மதிப்பிழப்பு நடவடிக்கை கொண்டுவரப்பட்டு இன்றுடன் 5 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் காங்கிரஸ் கட்சி கடுமையாக ஒன்றிய அரசை சாடியுள்ளது.

கடந்த 2016–ம் ஆண்டு நவம்பர் 8–ந் தேதி இரவில் டெலிவி‌ஷனில் திடீரென எந்தவித முன்னறிவிப்பு இல்லாமல், பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர், ‘ஊழலுக்கும், கருப்பு பணத்துக்கும், கள்ள நோட்டுக்கும், பயங்கரவாதத்துக்கும் எதிராக போரிட்டு நாட்டை தூய்மைப்படுத்த 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் உடனடியாக செல்லாது என ஆகிவிடுகிறது’ என்று அறிவித்தார்.

இதைத்தொடர்ந்து 2,000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. பண மதிப்பிழப்பு செய்யப்பட்ட மொத்த 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளின் மதிப்பு ரூ.15 லட்சத்து 44 ஆயிரம் கோடி. ஆனால், வங்கிக்கு திரும்ப வந்தது ரூ.15 லட்சத்து 28 ஆயிரம் கோடியாகும். ஒரு சதவீத நோட்டுகள்தான் திரும்பவரவில்லை.  பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது மக்கள் வங்கியில் சேமித்து வைத்திருந்த பணத்தை எடுக்க முடியாமல் வங்கி முன் நீண்ட வரிசையில் காத்துக் கிடந்தனர். மக்களுக்கு கடும் சிரமத்தை பண மதிப்பிழப்பு நடவடிக்கை ஏற்படுத்தியதாக கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

Manish-Tiwari

இந்நிலையில் பண மதிப்பிழப்பு நடவடிக்கை கொண்டுவரப்பட்டு இன்றுடன் 5 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் காங்கிரஸ் கட்சி கடுமையாக ஒன்றிய அரசை சாடியுள்ளது.

காங்கிரஸ்  மூத்த தலைவர் மணிஷ் திவாரி இன்று அளித்த பேட்டியில் கூறுகையில், “பண மதிப்பிழப்பு நடவடிக்கை கொண்டுவரப்பட்டு இன்றுடன் 5 ஆண்டுகள் முடிகின்றன. துக்ளக் பிரதமர் கடந்த 2016-ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவால் கறுப்புப் பணம், ஊழல், தீவிரவாதம் முடிவுக்கு வரும் என்று தெரிவித்தார்.

ஆனால், கடந்த 5 ஆண்டுகளாக பிரதமர் மோடி கூறியதில் எதுவும் நடக்கவில்லை. பணப் புழக்கம் அதிகரித்துள்ளது, ஊழல் அதிகரித்துள்ளது, பயங்கரவாத செயல்களுக்குப் பணம் செல்கிறது. 2016-ம் ஆண்டுக்கு முன்பு இருந்த சூழல் நிலவுகிறது. பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் எந்த நோக்கங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது, எது நிறைவேற்றப்படவில்லை என்பது குறித்து  நாட்டிற்கு பிரதமர் மோடி விளக்க வேண்டும்” என்றார்.

From around the web