ஜெய்ப்பூர் கோட்டையில் செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்த 11 பேர் மின்னல் தாக்கி பலி!!

 
Lighting

ஜெய்ப்பூர் அருகே, பழங்கால கோட்டையில் செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்த 11 பேர் மின்னல் தாக்கி உயிரிழந்தனர்.

வட இந்தியாவில் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.  ராஜஸ்தான், மத்திய பிரதேசம்  மற்றும் உத்தர பிரதேசத்தில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.

ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம் ஆகிய 3 மாநிலங்களில் ஒரே நாளில் மின்னல் தாக்கி மொத்தம் 68 பேர் உயிரிழந்துள்ளனர்.

ராஜஸ்தான், ஜெய்ப்பூர் அருகே அமைந்துள்ள அமர் அரண்மணை, 12-ம் நூற்றாண்டை சேர்ந்ததாகும். நேற்று மாலை, மழை பெய்துகொண்டிருந்த நிலையில், கோட்டை மற்றும் அரண்மனையை சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தவர்களில் சுமார் 27 பேர் அங்குள்ள கோபுரம் ஒன்றில் இருந்துள்ளனர்.

பலர் செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்த வேளையில் மின்னல் தாக்கியுள்ளது. இதில் 11 பேர் உயிரிழந்தனர். 12 பேர் காயமடைந்தனர். மின்னல் தாக்கியவுடன் சிலர் அச்சத்தில் கீழே குதித்து காயமடைந்ததாகக் கூறப்படுகிறது. இதுதவிர, ராஜஸ்தானில் மேலும் 9 பேர் வெவ்வேறு இடங்களில் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர்.

உத்தரபிரதேசத்தின் பிரயாகராஜின் சில பகுதிகளிலும் 14 பேர் தனித்தனியான மின்னல் தாக்குதல் சம்பவங்களில்  உயிரிழந்து உள்ளனர். கான்பூர் தேஹத் மற்றும் பதேபூரில் தலா 5 பேரும், கவுசாம்பியில் 4 பேரும், பிரோசாபாத்தில் 3 பேரும், உன்னாவ், ஹமீர்பூர் மற்றும் சோன்பத்ராவில் தலா ஒருவரும்  இறந்துள்ளனர். கான்பூர் நகரில் தலா 2 பேர் இறந்தனர், பிரதாப்கர் ஹர்தோய் மற்றும் மிர்சாபூரில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர்.

இதேபோல மத்திய பிரதேசத்திலும் மின்னல் தாக்கிய சம்பவங்களில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

From around the web