கேட்டதெல்லாம் கொடுக்கும் கூகுளாண்டவர் கதை!

ஸ்டார்ட்-அப் விக்கிரமாதித்தன்ஸ் – 15 கூகுள் ”கேளுங்கள் தரப்படும், தட்டுங்கள் திறக்கப்படும், தேடுங்கள் கிடைக்குமென்றார் கூகுளாண்டவர்” என்று நாங்கள் வேடிக்கையாக பாடுவதுண்டு. அந்த அளவிற்கு ஒரு தேடுபொறி (Search Engine) நமது அன்றாட வாழ்வின் ஓர் அங்கமாக, மாபெரும் வரமாக மாறி இருக்கிறது. எது ஒன்றை தெரிந்துகொள்ளவும் அந்தத் துறையை சார்ந்தவரை தேடி காத்திருந்த காலமெல்லாம் மலையேறிவிட்டது. உலகம் இன்று கைப்பிடியில்; தகவல்கள் இன்று விரலிடுக்கில் என்று மாற்றியது கூகுள்தான். ஏன் கூகுளுக்கு முன்பு எந்த தேடுபொறியும் இல்லையா?.கூகுள் மட்டும் தான் இதை செய்கிறதா
 

ஸ்டார்ட்-அப் விக்கிரமாதித்தன்ஸ் – 15 கூகுள்

”கேளுங்கள் தரப்படும், தட்டுங்கள் திறக்கப்படும், தேடுங்கள் கிடைக்குமென்றார் கூகுளாண்டவர்” என்று நாங்கள் வேடிக்கையாக பாடுவதுண்டு. அந்த அளவிற்கு ஒரு தேடுபொறி (Search Engine) நமது அன்றாட வாழ்வின் ஓர் அங்கமாக, மாபெரும் வரமாக மாறி இருக்கிறது.

எது ஒன்றை தெரிந்துகொள்ளவும் அந்தத் துறையை சார்ந்தவரை தேடி காத்திருந்த காலமெல்லாம் மலையேறிவிட்டது. உலகம் இன்று கைப்பிடியில்; தகவல்கள் இன்று விரலிடுக்கில் என்று மாற்றியது கூகுள்தான். ஏன் கூகுளுக்கு முன்பு எந்த தேடுபொறியும் இல்லையா?.கூகுள் மட்டும் தான் இதை செய்கிறதா என்று கேட்டீர்கள் என்றால் கூகுள் மக்களை அப்படி நம்ப வைத்துவிட்டது. கூகுளுக்கு முன்பும், பின்பும் எண்ணற்ற தேடுபொறிகள் பிறந்தன. ஆனால் கூகுள் மட்டுமே நிலைத்தது. காரணம் அதன் துல்லியமும், எளிமையும், இலவச சேவையும்.

மாணவர்களின் பேராசிரியர்

1995, டிசம்பர் மாதத்தின் பனிக்கொட்டும் இரவு. ஸ்டான்போர்ட் பல்கலைகழகத்தில் பயிலும் லாரிபேஜ், செர்ஜிப்ரின் என்ற இரண்டு ஆராய்ச்சி மாணவர்கள் தங்கள் ஆராய்ச்சி வழிகாட்டியாக இருந்த டெர்ரி வைனோகிராட் என்ற பேராசிரியரை சந்திக்க சென்றார்கள். குளிர் மைனசை தொடும் அந்த இரவு நேரத்தில் ஜன்னலை திறக்கக் கூட மனசு வராது. கதவைத் திறக்கச் சொல்வதெல்லாம் கொடுமையாக இருக்கும். ஆனால் பேராசிரியர் டெர்ரி அவ்வாறு யோசிப்பதில்லை.

எந்நேரமும் அவரைத் தொந்தரவு செய்ய அவரது சிஷ்யபிள்ளைகளுக்கு அனுமதி உண்டு. லாரிபேஜ்ஜும், செர்ஜிப்ரின்னும் தங்களுக்கு புதிதாக தோன்றிய அந்த ஐடியாவை எடுத்துச் சொல்லி ’இது சரியா வருமா’ என்று கேட்டார்கள். ’இதுதான் சரியாக வரும்; தொடருங்கள்’ என்று ஊக்கம் கொடுத்தார். அந்த புராஜக்ட் பெயர் “பேக்ரப்”.

ஓர் இணையதளத்தின் முக்கியத்துவத்தை வைத்து அது தேடுபொறியில் முதலில் வரிசைப்படுத்தப்படும். கூகுள் பிறக்கும் முன்புவரை அந்த முக்கியத்துவம் அந்த இணையதளத்தில் உள்ள வார்த்தைகளின் எண்ணிக்கையை வைத்து கணக்கிடப்பட்டது. பேக்ரப் என்ற இவர்களின் தேடுபொறி வார்த்தைகளின் முக்கியத்துவத்தையும் கூடவே அந்த தளத்துடன் தொடர்புடைய பிற தளங்கள் மற்றும் அவர்களின் குறிப்பை வைத்து தேடி வரிசைப்படுத்தியது. எளிதாக விளக்குகிறேன்.

“நாங்கள் ஒரு சிறந்த ஜவுளிக்கடை” என்று கடை முழுதும் எழுதி வைப்பதால் அது நல்ல கடை ஆகிவிடாது. அந்தக் கடையை பற்றி வாடிக்கையாளர்கள், பொதுமக்கள் தங்களின் சுவற்றில் (இணைய பக்கத்தில்) அதை சிறந்த ஜவுளிக்கடை என்று சொல்கிறார்களா.. அப்போ அதுதான் சிறந்தகடை. இந்த ஐடியாவிற்கு தான் பேராசிரியர் டெர்ரி சரியாக வரும் என்று ஊக்கம் கொடுத்தார்.

பேக்ரப் என்ற புராஜெக்ட்டில் இருந்து கூகுள் எப்படி பிறந்தது என்பதை பார்க்கும் முன் லாரிபேஜ் மற்றும் செர்ஜிபிரினின் கதையை சுருக்கமாக பார்த்துவிடலாம்.

லாரிபேஜ் மிச்சிகன் மாநிலத்தில் உள்ள ஈஸ்ட் லான்சிங் என்ற ஊரில் மத நம்பிக்கைகள் அற்ற ஒரு குடும்பத்தில் பிறந்தார். அப்பா விக்டர்பேஜ் கணினி அறிவியலில் டாக்டர் பட்டம் பெற்றவர். அப்போது தான் அந்தத் துறை பிறந்து வளர்ந்த பருவம். அப்போது மிச்சிகன் பல்கலைகழகத்தில் விக்டர்பேஜ் பேராசிரியராக பணியாற்றுகிறார். லாரிபேஜ்ஜின் தாய் க்ளோரியா ஒரு கணிணிஆசிரியராக அதே மிச்சிகன் பல்கலைகழகத்தில் வேலை பார்த்தவர். இருவரும் ஒரே துறை என்பதால் சொல்லத் தேவையில்லை.

காதல், கல்யாணம், குழந்தை லாரிபேஜ் எல்லாம் சிறப்பாக, எளிதாக நிறைவேறி விடுகிறது. குழந்தை லாரிபேஜ் ஆறுவயதில்தான் கணினித் துறையில் முதல் பெர்சனல் கம்ப்யுட்டர் பிறக்கிறது. பெற்றோரும் அதே துறை என்பதால் அதை வாங்கி வீட்டில் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துகிறார்கள். இளம்பருவத்தில் விளையாட்டு மற்றும் செயல்முறை கல்வியுடன் கற்றுத்தரும் மாண்டிசோரி பள்ளிப்படிப்பு, மிச்சிகன் பல்கலைகழகத்தில் கம்ப்யுட்டரில் எஞ்சினியரிங் படிப்பு, படிக்கும்போதே பல கண்டுபிடிப்பு முயற்சிகள்.

ஒரு டாட் மாட்ரிக்ஸ் பிரின்ட்டரை இன்க்ஜெட் ப்ரின்ட்டராக உருவாக்கிகாட்டினார். டிரைவர்கள் இல்லாத மோனோரயில்களை ட்ராம்வண்டிகள் போல பிரித்து பள்ளிக்குழந்தைகளை ஏற்றிச்செல்லும் ஒரு சிஸ்டமாக வடிவமைத்தார். இப்படி பல கண்டுபிடிப்பு முயற்சிகளால் அப்போது விழுந்த விதை தான் பின்னாளில் அதே துறையில் அவரை உச்சத்தில் கொண்டு சேர்க்கிறது.

செர்ஜிப்ரின் பிறப்பால் ஒரு ரஷ்யர். அவர் மாஸ்கோவில் வாழ்ந்த ரஷ்ய யூத குடும்பத்தில் பிறந்தவர். சோவியத் யூனியன் கம்யூனிச ஆட்சியில் யூதர்கள் மாஸ்கோ பல்கலைகழகத்தின் மேற்படிப்பு படிக்க தடுத்து வைக்கப்பட்டார்கள். குறிப்பாக இயற்பியல் துறை. காரணம் ரஷ்யர்கள் யூதர்களை அணுஆயுதத் துறையில் நம்பவில்லை. எழுத்துப்பூர்வமான சட்டம் எதுவும் இல்லையென்றாலும் நடைமுறையில் அப்படித்தான் இருந்தது. செர்ஜிப்ரினின் தந்தை மைக்கேல்-ப்ரின் கனவுப் பாடம் இயற்பியல் தான்.

ஆனால் அவர் விரும்பியதுறையில் அரசியல் காரணங்களால் படிக்க முடியாததால் அதனுடன் தொடர்புடைய கணித பாடத்தில் பட்டம் பெற்றார். அதற்கே அவர் பெரும் போராட்டம் நடத்தவேண்டியிருந்தது. செர்ஜிப்ரினின் தாய் விண்வெளித்துறையில் மேற்படிப்பு படிக்க விரும்பினார். மைக்கேல் ஒரு கருத்தரங்கிற்காக போலாந்தில் உள்ள வார்சாவிற்கு சென்றுவந்தார். அங்கு அவருடன் பழகிய சக பன்னாட்டு மாணவர்கள் அவர்களுக்கு கிடைத்த வாய்ப்புகள் மைக்கேலை கவர்ந்தது. முடிவு செய்துவிட்டார்.

அறிவுக்கு  தடை கூடாது!

அறிவை வளர்க்க அரசியல், மதம், தேசம் ஒருபோதும் ஒரு தடையாக இருக்கக் கூடாது. அது எங்கு பாரபட்சமில்லாமல் கிடைக்கிறதோ அங்கே சென்றுவிட வேண்டும் என்று விரும்பினார். அது தான் தன் பிள்ளைகளின் எதிர்காலத்திற்கும் சிறந்தது என்று நினைத்தார். நாட்டை விட்டு வெளியேற எக்சிட் விசாவிற்கு விண்ணப்பித்தார். எட்டுமாத காலம் கடும் போராட்டத்திற்கு பிறகு அவர்களுக்கு கிடைத்தது. இந்த எட்டுமாத காலத்தில் மைக்கேல் கணிணி மொழிகளை கற்றுத் தேர்ந்தார்.

கணிணி தான் இனி உலகை ஆளும் என்று புரிந்தபிறகு அதற்காக வாய்ப்புகளை அள்ளிக்கொடுக்கும் அமெரிக்காவிற்கு குடிபெயர்வதென்று முடிவெடுத்தார். பலகட்ட போராட்டங்களுக்கு பிறகு அவர் கணித பேராசிரியராக மேரிலாண்ட் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். தாய் விண்வெளி துறை ஆராய்ச்சியாளர். Goddard Space Flight Center என்ற நாசாவின் விண்வெளி ஆய்வகத்தில் ஆய்வாளராக வேலை பார்த்தார்.

செர்ஜிபிரினின் குடும்பம் அமெரிக்காவில் குடியேறியபோது அவருக்கு ஆறுவயது. லாரிபேஜ் போலவே இவரும் செயல்முறைகல்வி மூலம் கற்றுக்கொடுக்கும் மாண்டிசோரி பள்ளியில் பயின்றார். மேரிலாந்து பல்கலைகழகத்தில் கல்லூரி படிப்பு. இளங்கலை அறிவியல் கணினி மற்றும் கணித பாடத்தில் பட்டம் பெற்றார். டாக்டரேட் செய்ய ஸ்டாண்ட்போர்ட் பல்கலைகழகத்தில் சேர்ந்தார். அங்கு தான் லாரிபேஜ்ஜை சந்தித்தார்.

அவர்கள் இருவரும் செய்த அந்த பேக்ரப் என்ற புராஜெக்ட்டை இணையத்தில் வெளியிட்டு சோதனை செய்ய முடிவு செய்தார்கள். அதற்கு ஒரு நல்ல பெயரை கொடுக்க விரும்பியபோது கணிதப் பேராசிரியரான செர்ஜிபிரினின் அப்பா உலகின் மிகப் பெரிய எண்ணின் பெயர் கூகுள் (googol) என்று கூறியது ஞாபகம் வரவே நண்பன் லாரியிடம் கூறினார். அவருக்கும் இது பிடித்துவிட இணையத்தில் அந்தப் பெயரை பதிவு செய்ய கொஞ்சம் மாற்றி Google என்று பெயர் வைக்கிறார்கள்.

ஸ்டாண்ட்போர்ட் பல்கலைகழகத்தின் சீனியர் ஆராய்ச்சி மாணவரும், ஜாவா மொழியை கண்டுபிடித்த சன் மைக்ரோசிஸ்டத்தின் நிறுவனருமான ஆன்டி பெக்டோல்சம் இவர்களுக்கு உதவுகிறார். ஒரு லட்சம் டாலர்கள் முதலீடு கிடைக்கிறது. அடுத்து அமேசானின் நிறுவனரான ஜெப் பெசாஸ் ஒரு லட்சம் டாலர்கள் முதலீடு செய்கிறார். அதே ஸ்டாண்ட்போர்ட் பல்கலைகழகத்தின் பேராசிரியர் தன் சேமிப்பு அனைத்தையும் இவர்களிடம் முதலீடு செய்கிறார். நான்காவது முதலீட்டாளர் ஒரு தமிழர். சென்னை லயோலா கல்லூரியில் படித்தவர். அமேசானில் ஜெப் பெசாஸ்சுடன் பணிபுரிந்த ராம்ஸ்ரீராம் தான் அவர். தன் கையிருப்பு அனைத்தையும் கூகிளில் முதலீடு செய்கிறார்.

இப்படி ஸ்டார்ட்அப் நிறுவனம் வளரும் பருவத்தில் முதலீடு செய்பவர்களை ஏஞ்சல் இன்வெஸ்டர் ( Angel Investor ) என்று கூறுவார்கள்.  

அதன்பிறகு கூகுள் தனது துல்லியமான தேடுபொறியின் சேவையாலும், மிக மிக எளிதாக எல்லோருக்கும் புரியும் வகையில் பயன்திறனுடன் (Usability) உருவாக்கப்பட்டதாலும் மக்களை எளிதாக கவர்ந்தது. எவ்வளவு விரைவாக மக்களை கவர்கிறதோ அவ்வளவு விரைவாக பெரும் முதலீட்டாளர்களையும் கவரும். கூகுளும் கவர்ந்தது. செக்குயா கேப்பிட்டல், காபில்டுஅண்ட் பயர்ஸ் போன்ற பெரும் முதலீட்டு நிறுவனங்கள் முதலீட்டை கொட்டின. கூகுளும் வளர்ந்தது.

2004இல் கூகுள் உலகமெல்லாம் சென்று சேர்ந்து பெரும் வெற்றி பெற்றது. ஆகவே பங்குசந்தையில் முதலீடு கோரி பங்குகளை விற்றார்கள். ஏற்கனவே மக்களிடம் சேர்ந்து நல்ல பெயரை சம்பாதித்தால் மிக எளிதாக பங்குகளின் விலை உயர்ந்தது. இன்று வரை அதன் பங்கு வளர்ந்துகொண்டே செல்கிறது. அதன்பிறகு கூகிள் நிறுவனத்தின் பணியாளர்கள் பலரும் மில்லியனர்கள் ஆனார்கள். வெறும் ஒரு லட்சம் டாலர்கள் முதலீடு செய்த ஏஞ்சல் இன்வெஸ்டர்களான ராம்ஸ்ரீராம், பேராசிரியர் டேவிட் செரிடன் போன்றோர் பில்லியன் டாலர் அதிபர்கள் ஆனார்கள்.

செர்ஜி ப்ரின்னும், லாரிப்பேஜ்ஜும் உலகின் டாப் 10 பணக்காரர் பட்டியலில் இடம்பெற்றார்கள். இன்று இருவருக்கும் தலா மூன்று லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களும் பங்குகளும் உள்ளது.

கூகுள் பல கிளைகளுடன் பெரும் ஆலமரமாக வளர்ந்து நிற்கிறது.

ஸ்டார்ட்அப் பாடம்

கூகுள் இன்று 350 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள உலகின் பெரும் நிறுவனம். இம்மாபெரும் வெற்றிக்கு காரணம் கூகுளின் படைப்புகள் அனைத்தும் மக்களையும் வெற்றி அடையச் செய்த படைப்புகள். நாம் ஒவ்வொருவரும் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள கூகுளின் சேவைகளை, படைப்புகளை இலவசமாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

நீங்கள் ஆரம்பிக்கும் ஸ்டார்ட்அப் மிகப்பிரமாண்ட வெற்றி அடையவேண்டுமென்றால் அது எந்தளவிற்கு மக்களுக்கு பயன்படும் என்று யோசியுங்கள். உங்கள் சேவையோ, படைப்போ தேச எல்லைகள் கடந்து எல்லாதரப்பு மக்களுக்கும் பயன்பட பயன்பட உங்களின் வளர்ச்சி அதிகரித்துக்கொண்டே செல்லும். அதுமட்டுமில்லாது உங்களின் வளர்ச்சியை யாராலும் தடுக்கவே முடியாது. கூkuள் தங்கள் பணியாளர்களை மிகச் சிறப்பாக கவனிப்பார்கள். எண்ணற்ற சலுகைகளை அள்ளித் தருவார்கள்.

கட்டற்ற சுதந்திரம் கொடுப்பார்கள். ஒரு துளி பாகுபாடும் இல்லாமல் பார்த்துக் கொள்வார்கள். இந்த ஆன்டி-கார்ப்பரேட் கலாசாரத்தை இவர்கள் சிறப்பாக செய்ததால் பல ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், பெரு நிறுவனங்கள் இதையே பின்பற்றினார்கள். இதற்கு பெயரே கூகுள் கல்ச்சர் என்றானது. கூகுள் நிறுவன மோட்டோ சொல்லிவிடும் ஏன் கூகுள் பிரமாண்டமாக வெற்றி பெற்றதென்று. அது “நல்லதை செய்”.

-கார்த்திகேயன்
நிறுவனர்: Fastura Technologies
www.Fastura.com

முந்தைய வாரம்:

ஃபேஸ்புக் நாயகன் – இன்னொருவன் பிறந்துதான் வரணும்!

From around the web