இந்தித் திணிப்பு.. பரபரத்த புதன்கிழமை… கிங் மேக்கர் ரஜினி?

அரசியலில் சரியான நேரத்தில் காய் நகர்த்துதல் என்பது மிகவும் முக்கியமானது. வாய்ப்பை தவற விட்டால் மீண்டும் அப்படி ஒரு வாய்ப்பு கிடைக்காது. சில நேரங்களில் தற்செயலான ஒரு நிகழ்வுக்குக்கூட எதிர்பாராதவிதமாக வாய்ப்புகள் அமைந்து விடுவதும் உண்டு. செப்டம்பர் மாதம் 15ம் தேதி என்றாலே திமுக, திராவிட கழகத் தொண்டர்களுக்கு உத்வேகமும் உணர்ச்சியும் ததும்பும் நாட்கள். அறிஞர் அண்ணா பிறந்தநாள், திமுக தொடக்க நாள், தந்தை பெரியார் பிறந்தநாள் என முப்பெரும் விழாக் கூட்டங்களை செப்டம்பர் இறுதி வரையிலும்
 

ரசியலில் சரியான நேரத்தில் காய் நகர்த்துதல் என்பது மிகவும் முக்கியமானது. வாய்ப்பை தவற விட்டால் மீண்டும் அப்படி ஒரு வாய்ப்பு கிடைக்காது. சில நேரங்களில் தற்செயலான ஒரு நிகழ்வுக்குக்கூட எதிர்பாராதவிதமாக வாய்ப்புகள் அமைந்து விடுவதும் உண்டு.

செப்டம்பர் மாதம் 15ம் தேதி என்றாலே திமுக, திராவிட கழகத் தொண்டர்களுக்கு உத்வேகமும் உணர்ச்சியும் ததும்பும் நாட்கள். அறிஞர் அண்ணா பிறந்தநாள், திமுக தொடக்க நாள், தந்தை பெரியார் பிறந்தநாள் என முப்பெரும் விழாக் கூட்டங்களை செப்டம்பர் இறுதி வரையிலும் காணலாம்.

இப்படி தொண்டர்கள் உணர்ச்சிப் பெருக்கோடு இருக்கும் நேரத்தில், மத்திய அமைச்சர் அமித் ஷாவின் ”இந்தி மொழியே இந்தியாவை ஒன்றிணைக்கும். உலக அளவில் இந்தியாவின் அடையாளமாக இருக்கும்” என்ற அறிவிப்பு, அரசியலைப் பொறுத்த வரையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு மிகப்பெரும் வாய்ப்பாக அமைந்தது என்றே சொல்லலாம்.

புதன் கிழமை திருப்பங்கள்

கொஞ்சமும் தாமதிக்காமல் கண்டனம் தெரிவித்த மு.க.ஸ்டாலின், இந்தித் திணிப்புக்கு எதிராக போராட்டம் என்றும் அறிவித்தார். வெள்ளிக்கிழமை போராட்டம் நடைபெற இருந்த வேளையில் தான், புதன் கிழமை திருப்பங்கள் அடுத்தடுத்து அரங்கேறின.

அதிமுக உட்பட தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளும் இந்தித் திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து விட்டார்கள். ஜல்லிக்கட்டை விட பெரிய போராட்டம் வெடிக்கும் என்ற கமல் ஹாசனின் வீடியோ வைராலனது. திமுக போராட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி ஆதரவளிக்க வேண்டும் என்று திகார் சிறையிலிருந்தே,(குடும்பத்தினர் உதவியோடு?) ட்வீட் செய்தார் ப.சிதம்பரம்.

1967ம் ஆண்டு இந்தித் திணிப்புக்கு எதிராக தமிழகத்தில் பெரும் போராட்டம் நடந்த போது அண்டை மாநிலங்களில் எந்த சலனமும் இல்லை. ஆனால் தற்போது, அமித் ஷாவின் அறிவிப்புக்கு எதிராக கேரளாவில் எதிர்ப்புக்குரல் எழுந்தது. அகில இந்திய காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்தது. கர்நாடகாவில் பாஜக முதல்வரே எதிர்ப்பு தெரிவித்தார். மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி ஆர்ப்பரித்தார்.

தமிழகத்தில் இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டத்திற்கு பெரும் ஆதரவு கிடைக்கும் சூழல் நிலவியது. அப்படி ஒரு போராட்டம் முன்னெடுக்கப்படும் நேரத்தில், அது அண்டை மாநிலங்களையும் மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களிலும் விரிவடையும் சூழல் இருந்தது என்பதே நிதர்சனம். பஞ்சாப் வரையிலும் சென்றிருக்கும். மஹாராஷ்ட்ராவில் ராஜ் தாக்கரே புறப்பட்டிருப்பார். இன்றைய சமூகத் தளங்களின் பங்களிப்பில், இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் பல மாநிலங்களில் பொதுமக்களிடையேயும் பரவும் நிலைக்கு, அதிக வாய்ப்புகள் உள்ளது.

இந்த சூழ்நிலையில் புதன்கிழமை மதியம் சென்னை விமான நிலையம் சென்றார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அவரைச் சூழ்ந்த செய்தியாளர்கள் சொல்லுங்க சார் என்று கேட்டனர். “எதைச் சொல்வது” என்று பதில் கேள்வி கேட்டார் ரஜினி. பேனர் விவகாரத்தை ஒரு செய்தியாளர் எழுப்பினார். ரசிகர்கள் பேனர்கள் வைக்கக்கூடாது என்று ரொம்ப காலத்திற்கு முன்பே சொல்லியிருக்கிறேன். ரசிகர்களை தற்போது சந்திக்கும் திட்டம் இல்லை என்று பதிலளித்தார்.

அடுத்த செய்தியாளர் இந்தித் திணிப்பு பற்றி கேட்க, ரஜினியின் ஒரு நிமிட பதில் தான் அன்றைய அரசியலை மாற்றிப் போட்டது. “முன்னேற்றம், வளர்ச்சி, ஒற்றுமைக்கு ஒரே மொழி இருந்தால் நல்லது தான். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இந்தியாவில் அதற்கு வழி இல்லை” என்றார். அதன் பிறகு “இந்தியைத் திணித்தால் தமிழ்நாடு மட்டுமல்ல, தென் இந்தியா, வட இந்தியாவிலும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்,” என்றும் கூறினார்.

ரஜினியின் கருத்தை உளவியல் ரீதியாக அணுகினால் இரண்டு விஷயங்கள் புலப்படும். முதலில் அமித் ஷாவின் ஒரே மொழி கருத்துக்கு, “உங்கள் கருத்து சரிதான். உலக அளவில் ஏற்புடையது தான்” என்று ஏற்றுக்கொண்டவர், அடுத்ததாக, “ஆனால் இந்தியாவுக்கு இது சரியா வராது, தெற்கே மட்டுமல்ல வடக்கேயும் பிரச்சனை வரும். அதனால இதை விட்டுடுங்க,” என்ற அர்த்தத்தில் அமித் ஷாவுக்கு நேரடியாக சொன்ன பதிலாகவே எடுத்துக் கொள்ள முடியும்.

’குஜராத்தி’ அமித் ஷா

இதைப் புரிந்து கொண்ட அமித் ஷா, தடாலடியாக நானும் குஜராத்தி தான் என்று குஜராத் ப்ராண்டை தனக்கு சப்போர்ட்டாக எடுத்துக் கொண்டார். பாஜக தலைவரான பிறகு இது வரையிலும் அவர் தன்னை குஜராத்தி என்று பொதுவெளியில் சொன்னதே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அமித் ஷா சொல்வது போலவே, அவருடைய பேச்சை தவறாகப் புரிந்து கொண்டார்கள் என்றே வைத்துக் கொள்வோம். ஆனால் ட்வீட்டில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளாரே! “இந்தியாவை ஒரே மொழி தான் ஒன்றிணைக்க முடியும். அது இந்தி தான். உலக அளவில் இந்தியாவுக்கு அடையாளமாக இருக்கும்,” என்று சொன்னதை ஹெச்.ராஜா போல் அட்மின் மீது பழி சுமத்தி தப்பிக்க முடியுமா?. ஆக, அமித் ஷா அந்தர் பல்டி என்பதில் மாற்றுக் கருத்தே கிடையாது. அதுவும் ரஜினியின் பேட்டிக்குப் பிறகு என்பதையும் மறுக்க முடியாது.

அத்தோடு நின்றுவிட வில்லையே அமித் ஷா!. உடனடியாக தமிழக ஆளுநருக்கு தகவல் அனுப்பி, ஆளுநர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கிறார். ஸ்டாலின் தனது கட்சித் தலைவர்களுடன் செல்கிறார். ஆளுநரின் உறுதியை ஏற்று போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகிறது. மதியத்திற்குப் பிறகு தொடங்கிய பரபரப்பு மாலை 7 மணி அளவில் ஓயத் தொடங்குகிறது.

திமுகவுக்கு போராட்டம் நடத்த வாய்ப்பு இல்லை. மத்திய உள்துறை அமைச்சரே அந்தர் பல்டி. இரண்டையும் போகிற போக்கில் ஒரு நிமிட பேட்டி மூலம் செய்து முடித்துள்ளார் ரஜினிகாந்த் என்றால் மிகையல்ல. எந்த நேரத்தில், யார், எதைச் சொன்னால் அதற்குரிய பலன் கிடைக்கும் என்பதும் அரசியலில் மிக முக்கியமானது.

கலைஞர் கருணாநிதியை ராஜ தந்திரி என்பதற்கு காரணமும் அதுவே. ஒரு சில சமயங்களில் கலைஞரின் டைமிங் மிஸ் ஆகியிருக்கலாம். ஆனால் பெரும்பாலும் ஸ்கோர் செய்து விடுவார். இறுதிக் காலம் வரையிலும் தமிழக அரசியலை தன்னைச் சுற்றியே அமைத்துக் கொண்டவராயிற்றே.

சமீபத்திய பேட்டி ஒன்றில், ஒவ்வொரு மணி நேரத்திற்கும் அரசியல் மாற்றங்கள் நடைபெறுகிறது என்று ரஜினிகாந்த் கூறியிருந்தார். நேற்று நடந்த நிகழ்வுகள் அதை உறுதி செய்துள்ளன.

அமித் ஷாவின் இந்தித் திணிப்பு விவகாரத்தைப் பொறுத்த வரையில் மு.க.ஸ்டாலினின் விஸ்வரூபமெடுத்த போராட்டம் , கமல் ஹாசனின் ஆவேசப் பேச்சு எல்லாமும் பலனற்றுப் போய்விட்டது. ரஜினியின் பாணியில் சொன்னால், ‘லேட்டானாலும் லேட்டஸ்டா வந்து கிங் மேக்கராக உயர்ந்துள்ளார் ரஜினிகாந்த்’ என்றே சொல்லலாம்.

– ஆர்.டி.எக்ஸ்

From around the web