மீள்பதிவு: தமிழகத்தின் சமூகச்சிக்கலும் இலங்கை இனப்படுகொலையும் – நீதியரசர் விக்னேஸ்வரன்! 

2015ம் ஆண்டு ஜூலை 5ம் தேதி சான் ஓசே நகரில் நடைபெற்ற ஃபெட்னா தமிழ் விழாவில் கலந்து கொண்ட, அப்போதைய இலங்கை வடமாகாண முதல்வர் நீதியரசர் விக்னேஸ்வரன், தமிழர் நலம் காக்க உலகத் தமிழர்கள் உதவ வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். தமிழ்நாட்டின் சமூகச் சிக்கலும், இலங்கை இனப்படுகொலையும் என்று இரு நாட்டிலும் வசிக்கும் தமிழர்களின் வேறுபட்ட நிலை குறித்து அவர் அப்போது பேசியது, இன்றைய சூழ்நிலைக்கு மீண்டும் நினைவு கூறத்தக்கது. 2015ம் ஆண்டு நீதியரசர் விக்னேஸ்வரனின்
 

மீள்பதிவு: தமிழகத்தின் சமூகச்சிக்கலும்  இலங்கை இனப்படுகொலையும் – நீதியரசர் விக்னேஸ்வரன்! 

2015ம் ஆண்டு ஜூலை 5ம் தேதி சான் ஓசே நகரில் நடைபெற்ற ஃபெட்னா தமிழ் விழாவில் கலந்து கொண்ட, அப்போதைய இலங்கை வடமாகாண முதல்வர் நீதியரசர் விக்னேஸ்வரன்,  தமிழர் நலம் காக்க உலகத் தமிழர்கள் உதவ வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். தமிழ்நாட்டின் சமூகச் சிக்கலும், இலங்கை இனப்படுகொலையும் என்று இரு நாட்டிலும் வசிக்கும் தமிழர்களின் வேறுபட்ட நிலை குறித்து அவர் அப்போது பேசியது, இன்றைய சூழ்நிலைக்கு மீண்டும் நினைவு கூறத்தக்கது.

2015ம் ஆண்டு நீதியரசர் விக்னேஸ்வரனின் பேச்சு விவரம் வருமாறு,

தமிழை சிறப்பாக வளர்க்கும் வெளிநாட்டுத் தமிழர்கள்

“பரந்து வாழும் தமிழர்களிடையே மூன்று முக்கிய எதிர்பார்ப்புகள் இருப்பதை காண்கின்றேன். ஒன்று தமிழை வளர்க்க வேண்டும், அடுத்தது தமிழை நிலைக்க வைக்க வேண்டும். மூன்றாவது தமிழர் நலன் காக்க வேண்டும் என்பதாகும்

தேமதுர தமிழோசை உலகமெல்லாம் பரவேண்டும், தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்யவேண்டும்,  நல்ல பல சாத்திரங்கள் தமிழ் மொழியில் இயற்ற வேண்டும், நமது தரமான வளமையை வெளி நாட்டவர் வணங்கிப் போற்ற வேண்டும் என்று தமிழை வளர்க்க பாரதியார் நான்கு அறிவுரைகள் கூறியுள்ளார்.

பாரதி கண்ட கனவை நனவாக்கி சிறப்பாக தமிழை வெளி நாட்டில் வளர்த்து வருகிறீர்கள்.

தமிழை நிலைக்க வையுங்கள்

தமிழை நிலைக்க வைக்க முறைப்படி தமிழில் பேச வேண்டும். அடுத்து வரும் சமுதாயத்திற்கு  நம் மொழி பற்றி கூற வேண்டும். அதில் பாண்டித்தியம் பெற வைக்க வேண்டும். இது பற்றி நீங்கள் தான் எனக்கு அறிவுரை வழங்க வேண்டும். உங்கள் மக்களுக்கு நீங்கள் தமிழ் சொல்லிக் கொடுக்கின்றீர்களா? தமிழ் மொழியின் தொன்மையும், அம் மொழியே நமது இனத்தின் ஆணி வேராகவும் இருப்பதை எடுத்து இயம்பி வருகின்றீர்களா?

நாங்கள் தமிழர்கள் என்று கூறி விட்டு நம் மக்களை பிற மொழியில் விற்பன்னர்கள் ஆக்கினோம் ஆனால் தமிழ் நிலைக்க மாட்டாது என்பதை நான் கூறி நீங்கள் தெரிய வேண்டியதில்லை.

நீங்கள் குழந்தைகளுக்கு தமிழ் சொல்லித்தருகிறீர்களா, தமிழில் பேசுகிறீர்களா என்ற அய்யத்தோடு தான் இங்கு வந்தேன்,  குழந்தைகளின் நிகழ்ச்சிகளைப் பார்த்த பிறகு  நீங்கள் தமிழை நிலைக்கச் செய்ய முயற்சிகள் எடுத்து வருகிறீர்கள் என்று தான் எனக்கு தோன்றுகிறது.

தமிழ் மொழி மட்டுமல்ல. வாழும் நெறி. நம் கலாச்சாரம் பண்பாடு அனைத்தும் அதில் பின்னிப் பிணைந்திருக்கிறது. பேசுவதால் தான் நம் மொழி நிலைத்து நிற்கிறது. தமிழை நிலைத்து வைக்க நாம் என்னென்ன நடவடிக்கைகள் என்பதை ஆற அமர சிந்திந்து முடிவெடுக்க வேண்டும்

தமிழர் நலம் காக்க வாருங்கள்

உலகத்தில் உள்ள அனைத்து தமிழர்களும் தமிழர்  நலம் காக்க முன் வரவேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கவே இந்த பயணத்தை நான் மேற்கொண்டுள்ளேன். பல இடங்களில் தமிழர்கள் ஓங்கி வாழ்ந்தாலும், எம் மக்கள் சொல்லொன்னாத் துயரத்துடன் வாழ்ந்து வருகிறார்கள் என்பதை நீங்கள் அறீவீர்கள்.

அவர்கள் பொருளாதாரம், கல்வி, வாழ்வாதாரம் என உயர வேண்டும் இருப்பவர்களும் இல்லாதவர்களும் ஒருங்கிணைந்தால் தான் தமிழர் நலன் பேணப்படும். தமிழர்கள் வாழ்க்கை முன்னேற்றம் அடையும்.

சமூகச் சிக்கலும் இனப்படுகொலையும்

சுதந்திரத்திற்கு பின் இந்தியாவின் தென்பகுதியான தமிழகத்தில் நடைபெற்றது சமூகச் சிக்கல் என்றே சொல்லலாம், திராவிடர்கள் ஆரியர்கள் என பேதங்களால் பாதிக்கப்பட்டனர். ஆனாலும் தென் இந்தியாவில் தமிழர்கள் நிலை விருத்தி அடைந்தே வந்துள்ளது. இதற்கு காரணம் இந்திய நாட்டின் அரசியல் சாசனம். தம்மை தாமே ஆட்சி செய்ய போதிய அதிகாரம் மாநில அரசுக்கு மத்திய அரசால் பகிர்ந்தளிக்கப்பட்டது.

ஆனால் இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதியில் வாழ்ந்த தமிழர்களுக்கு இந்த அரசியல் அதிகாரம் வழங்கப்பட வில்லை. இது தான் இலங்கைத் தமிழர்களின்  நிலை வீழ்ச்சி அடைந்தது. இதைத் தான் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் எடுத்துரைத்தேன். மக்களுக்கு தம்மைத் தாமே ஆளும் அதிகாரத்தை வழங்காமல் மத்தியே கட்டுப்படுத்தி வருகிறது என்பதை அவரிடம் விரிவாகச் சொன்னேன். அதாவது 13 வது திருத்தச் சட்டம் போதுமான அதிகாரத்தை வழங்கவில்லை என்பதையும் சுட்டிக்காட்டினேன்.

தென் இந்தியத் தமிழர்கள் சமூக சிக்கலிலிருந்து மீண்டு, கலை, கலாச்சாரம் பொருளாதாரம் என அபிவிருத்தி அடைந்து வருகிறார்கள். வடக்கு, கிழக்கு இலங்கை அவ்வாறு அல்ல.எமக்கு நேர்ந்திருப்பது சமூகச் சிக்கல் அல்ல. இனப்படுகொலைக்குள் அகப்பட்டுள்ளோம். இனப்படுகொலையை கண்டித்து ஏக மனதாக வடக்கு அரசில் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறோம்.

கேள்வி கேட்கும் சிங்களர்கள்

ஆன்மீகத்திலும் மனிதாபிமானத்திலும் ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்ட தாங்கள்இந்த தீர்மானத்தை நீங்கள் இயற்றலாமா? என்று சில சிங்கள நண்பர்கள் கேட்டார்கள். ஆன்மீகத்திலும் மனிதாபிமானத்திலும் ஈடுபாடு கொண்டதால் தான் இதை நிறைவேற்றினேன் என்று கூறினேன்.

6வது திருத்த சட்டத்தின் , பிரிவு 157 A ன் கீழ், நாட்டின் பிரிவினை பற்றி பேசுவதோ நடவடிக்கை எடுப்பதோ சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளது. 150 ஆயிரம் ராணுவத்தினர் வட மாகாணத்தில் மட்டும் நிலை கொண்டுள்ளார்கள். அந்த நிலையில் பிரிவு படாத இலங்கையில் எமது தனித்துவத்தை ஏற்றி, எமது பாரம்பரிய இடங்களை ஏற்றி, அடிப்படை அதிகாரங்களை எங்களுக்கு வழங்க வேண்டும் என்று கேட்டிருந்தோம். அந்த அடிப்படையில் தான் மக்கள் எங்களுக்கு ஏகோபித்த ஆதரவை தெரிவித்து எங்களுக்கு வாக்களித்தார்கள்.

அந்த நியாமான கோரிக்கைகளை முன்வைத்த போதும், அதற்கு எதிர்ப்பு வருகிறது.

எப்படி வரும் சமூக நல்லிணக்கம்?

சமூக நல்லிணக்கம் வேண்டுமானால், இதுவரை நடந்தவற்றை அறியாமல் சிந்திக்காமல் எவ்வாறு முன்னோக்கி செல்ல முடியும் என்று சிந்தித்தீர்களா என்று அவர்களிடம் கேட்டேன்.

மனிதாபிமானம் கொண்ட ஒருவரால் இது வரை நடந்த இனப்படுகொலையை ஏற்றுக்கொள்ள முடியுமா?.ஆன்மிகத்தில் ஈடுபடும் ஒருவர் இது வரை நடந்தவற்றை மறந்து முன்னோக்கி  நகர முடியுமா? காணாமல் போனவர்களின் உறவினர்களின் கண்ணீரும், கூக்குரலும் உங்கள் காதுகளுக்கு கேட்கவில்லையா? அவர்களுக்கு பதில் கூறாமல் எவ்வாறு சமூக நல்லிணக்கத்தை உருவாக்க முடியும் என்றும் கேட்டேன். உண்மையை அறிந்து கொண்டால் தான் சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என்றும் கூறினேன்.

ஆயுதம் ஏந்த வைத்த அரசாங்கம்

ராணுவத்தின் அட்டூழியம் பற்றி கூறுகிறீர்களே. உங்கள் இளைஞர்களின் அட்டூழியம் பற்றி ஏதும் கூறவில்லையே என்றார்கள். இளைஞர்களை ஆயுதம் ஏந்த வைத்தவர்கள் உங்கள் அரசாங்கங்களும் படைகளும். அரசின் அடக்குமுறைகளே இந்த போரை உருவாக்கியது. அரசியலில் அவர்கள் ஏற்படுத்திய அவநம்பிக்கையே இளைஞர்களை ஆயுதம் ஏந்த வைத்தன. நான்

எங்களுக்கு நடந்த சோகக் கதையை கூறி இருக்கிறேன். உங்களுக்கு ஏதேனும் எங்கள் இளைஞர்களால் நடைபெற்று இருந்தால், உங்கள் மாகாணத்தில் தீர்மானம் கொண்டு வாருங்கள். எந்த வித அடக்குமுறையோ, பலாத்காரமோ தவிர்க்கப்பட வேண்டியது. எனினும் அது  ஒரு இனத்தை குறிவைத்து நடைபெறும் போது, அதற்கு எதிர் தாக்குதல் அந்த இனத்தினால் நடத்தப்பட்டால் இனப்படுகொலையில் ஈடுபட்ட இனம் தான் அதற்கு பொறுப்பு கூற வேண்டும்.

சமுகச்சிக்கல் அல்ல – இனப்படுகொலை

தற்பாதுகாப்பு பற்றி சட்டத்தில் கூறி இருப்பதை பற்றி உங்களுக்கு உணர்த்த விரும்புகிறேன் என்று அவர்களிடம் குறிப்பிட்டேன்..எனவே எமது நாட்டில் நடந்துள்ளது சமூக சிக்கல் அல்ல. இனப்படுகொலை.இனவாதியாக எமது இனத்தை ஒடுக்க அழிக்க எடுக்கப்பட்ட  நடவடிக்கைகளை உலகத்தின் கவனத்திற்கு கொண்டுவரவே எமது தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எமது தமிழர்களின் நலம் காக்கவேண்டும் என்ற தலையங்கத்தின் கீழேயே பரிசீலித்து வருகிறோம்.

எமது நாட்டில் தமிழர்கள் நலம் பெற வேண்டுமானல் தமிழ் பேசும் வட கிழக்கு மக்களுக்கு சுயாட்சி கொடுப்பது அவசியம் சுவிட்சர்லாந்து நாட்டின் வெற்றிகரமான மாவட்ட சுயாட்சி திட்டத்தைப் போல், வட கிழக்கு மாகாணங்களிலும் ஏனைய பகுதிகளிலு சுயாட்சி கொடுக்கப்பட்டால் நாட்டில் சுபிட்சமும் சமாதானமும் ஏற்படும் என்றேன்.

சமச்சீர் கொள்கைகளை இரு இன அறிவு ஜீவிகளும் தற்போது உணர்ந்து, ஒற்றுமையுடன் செயலாற்ற வேண்டும் என்று கூறினேன்.

தமிழர்கள் நலம் காக்க அணி திரளுங்கள்..

வடகிழக்கு மாகாண மக்களின் வாழ்வாதாரத்தை வளப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை நான் கூறித்தான் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமா? கல்வி வாழ்வாதாரத்திற்கு முதலீடு செய்ய எமது மக்கள் முன் வரவேண்டும்.

ஒரு காலத்தில் தமிழகத்திற்கும் இலங்கைக்கும் வணிகம் நடைபெற்று வந்தது. தூத்துக்குடியிலிருந்து தோணிகள் வந்தன. பலாலியிலிருந்து சென்னை, திருச்சி நோக்கி விமானங்கள் பறந்து கொண்டிருந்தன.. இவற்றை மீண்டும் நடைபடுத்த முடியுமா என்று இரு நாட்டு அரசாங்கங்களும் பரிசீலிக்க வேண்டும். காங்கேசன் துறைமுகம் செப்பனிட்டு ஆழப்படுத்தப் பட்டால், இந்திய இலங்கை வியாபார நிலைமை சீரடையும்.

இவற்றை புதிய அரசிடம் கூறி இருக்கிறோம். பாராளுமன்ற தேர்தல் வர இருப்பதால் அஞ்சுகிறார்கள். எனினும் தமிழர்கள் நலம் காப்பது உலகெங்கும் இருக்கும் தமிழ் பேசும் மக்களின் தலையாய கடமையாகும்.

இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களாக வட கிழக்கு மாகாண மக்கள் வாழ்கின்றார்கள். அவர்களுக்கு உதவி அளிக்க நீங்கள் யாவரும் முன்வர வேண்டும். உசிதமான ஒரு தீர்வு உருவாக அகில உலக ரீதியில் தமிழ் மக்கள் அணி திரள வேண்டும் என்றும் கூறி வைக்கின்றேன். நீங்கள் யாவரும் பாதிக்கப்பட்ட எங்கள் மக்கள் நிலை உயர உங்களால் ஆன உதவிகளை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டு என் சிற்றுரையை முடித்து கொள்கிறேன்”  என்று நீதியரசர் உரையாற்றினார்.

நீதியரசர் சி.விக்னேஸ்வரனுக்கு வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப்பேரவை சார்பில் தலைவர் நாஞ்சில் பீட்டர், விழா ஒருங்கிணைப்பாளர் தில்லைக் குமரன், வளைகுடா தமிழ் மன்றத் தலைவர் ஆறுமுகம் பேச்சிமுத்து ஆகியோர் பொன்னாடை போர்த்தி, மாலை அணிவித்து மரியாதை செய்தார்கள்.

– இர.தினகர்

From around the web