திரைகடலோடியும் மனிதநேயம் தேடும் தமிழ் உறவுகள்!

பூவாகி, காயாகி, 2018ன் அனுபவக் கனிகளை அறுவடை செய்யும் நேரத்தில் திரும்பிப்பார்க்கிறேன். என்ன ஒரு ரோலர் கோஸ்டர் அனுபவங்கள்! தன் வருங்கால சந்ததியர் நலனுக்காகவும், தன் ஊர் சுற்றுப்புற சூழலுக்காகவும், ஜாதிமத வேறுபாடின்றி, இரண்டு லட்சம் மக்கள் இருமுறை அமைதியாக கூடியதென்ன!. ஜாலியன்வாலாபாக் போன்று அதிகார ஆளுமை 14 பேரை சுட்டு கொன்ற கொடுமையை என்னவென்பது. அதில் 17 வயது சிறுமியும் ஒருவர் என்பது சொல்லொண்ணாத் துயரம். இதயத்தில் என்றும் மாறா வடுவை உண்டாக்கிய இதன் தாக்கம்
 

திரைகடலோடியும் மனிதநேயம் தேடும் தமிழ் உறவுகள்!

பூவாகி, காயாகி, 2018ன் அனுபவக் கனிகளை அறுவடை செய்யும் நேரத்தில் திரும்பிப்பார்க்கிறேன். என்ன ஒரு ரோலர் கோஸ்டர் அனுபவங்கள்!

தன் வருங்கால சந்ததியர் நலனுக்காகவும், தன் ஊர் சுற்றுப்புற சூழலுக்காகவும், ஜாதிமத வேறுபாடின்றி, இரண்டு லட்சம் மக்கள் இருமுறை அமைதியாக கூடியதென்ன!. ஜாலியன்வாலாபாக் போன்று அதிகார ஆளுமை 14 பேரை சுட்டு கொன்ற கொடுமையை என்னவென்பது. அதில் 17 வயது சிறுமியும் ஒருவர் என்பது சொல்லொண்ணாத் துயரம்.

இதயத்தில் என்றும் மாறா வடுவை உண்டாக்கிய இதன் தாக்கம் உலக அளவில் தமிழ் பேசும் மக்களிடம் ஏற்படுத்திய ஒற்றுமை அளவில்லாதது. சம்பவம் நடந்த அடுத்த இரு நாட்களில் அமெரிக்காவில்/ கனடாவில் 25 நகரங்களில் கூடிய மக்கள் சக்தி என்ன என்பதை கண்கூடாக கண்டேன் . ஜல்லிக்கட்டில் தொடங்கிய இந்த ஒற்றுமை சமீபத்திய கஜா புயல் மீட்டெடுப்பு வரை தொடர்வது, உண்மையில் மனமார சிலாகிக்கக்கூடியது .

தமிழ் பேசும் மக்கள் திரைகடல் ஓடியும் திரவியம் தேடுவதோடு மட்டுமல்லாது, மனிதநேயத்தையும் தேடுபவர்கள் என்பதை உரக்கச் சொன்னது. பொதுப் பிரச்சனைக்கு, தமிழ் பேசும் மக்களை கூட்டிய தமிழ்ச் சங்கமாகட்டும், மொய்விருந்து வைத்து தமிழ்நாட்டு மக்கள் நலம் காக்க வந்த தமிழ் பள்ளியாகட்டும், பனைமரங்கள் வளர்க்க ஊக்குவிப்பதாகட்டும் இன்னும் நல்ல மனங்கள் உண்டு என்று பிரமிக்கவைத்தது

தனிப்பட்ட முறையில் எத்தனை, எத்தனை அறிமுகங்கள், உரிமையுடன் வீட்டிற்கு வந்து சென்ற சகோதரிகளாகட்டும், இங்கே ஒரு தமிழ்க் குடும்பத்திற்கு பிரச்சனை என்றால் உடனே நண்பர்களை விசாரிக்க சொல்லும் தோழர்களாகட்டும், தூத்துக்குடி பற்றி தொடர்ந்து ட்வீட் செய்து, இன்னும் தொடரும் மக்கள் அவதி குறித்து வெளிஉலகிற்கு விடாது சொல்லும் நண்பர்குழாமாகட்டும், இவ்வுலகில் இன்னும் மனித நேயம் செழித்து வாழ்கிறது என்று பறைசாற்றுகிறது.

மேற்கூறிய அனைத்து போராட்டங்களிலும் நான் கண்கூடாகக் கண்டதில் முக்கியமான ஒன்று. “ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் பெண்” என்பதைப் பழஞ்சொல்லாக்கி “அனைத்திலும் பெண்கள் முன்னின்று ஆண்களுடன் வழிநடத்திச் சென்றனர்” என்பதை புது வழக்கமாக்கினர் என்பது தான் அது. சில நேரங்கள் பெண்கள் மட்டுமே முன்னின்றி நடத்தச் செய்தனர் என்பது உண்மை. நெஞ்சார்ந்த வாழ்த்துகள் எம் குலப்பெண்டிர்களுக்கு.

பொதுக்களத்திலும், விவாதங்களிலும் எதிர் துருவங்களாக இருந்து அடித்துக்கொண்டாலும், ஒருவொருக்கொருவர் வெளிப்படையாக கருத்துப் பரிமாற்றம் செய்யும் அளவுக்கு, ‘நண்பேண்டா’ என உண்மையான தோழமைகளையும் அடையாளம் காட்டியது. நம்முடைய கருத்துக்களை இன்னொரு நண்பரும் சொல்லக் கேட்கும் போது, நாம் சரியான பாதையில் போய்க்கொண்டிருக்கிறோம் என்பதை உணரச் செய்த சம்பவங்களும் உண்டு. அந்த நாளை புத்துணர்ச்சியோடு எதிர்க்கொள்ளச் செய்த உரையாடலகள் அவை.

மொத்தத்தில் இந்த ஆண்டு எனக்கு உலகத்தை முற்றிலும் வேறு கோணத்தில் காட்டியதோடு மட்டுமல்லாது நம்மை சுற்றிலும் கரிசனத்துடனும், மனிதநேயத்துடனும் மக்கள் பலர் உள்ளனர் என்று வெளிச்சம் போட்டு காட்டினார்கள், யாதும் ஊரே யாவரும் கேளீர் என்பதை நிதர்சனமாக்கிய தமிழ் உறவுகள்.

இறையருளுடனும், குடும்ப பக்கபலத்துடனும் 2019ம் ஆண்டை மகிழ்ச்சியுடன் அனைவரும் எதிர்கொள்வோம் . தமிழராய் வெல்வோம்.

என்றும் அன்புடன்
சரவணன், டல்லாஸ், யு.எஸ்.ஏ.

From around the web