‘பஞ்ச தந்திரம்’ 2-ம் பாகம் தொடங்கப்படுமா..? ரசிகருக்கு நடிகர் ஸ்ரீமன் பதில்

 
Sriman

‘பஞ்ச தந்திரம்’ படத்தின் 2-ம் பாகம் தொடங்கப்படுமா என்ற ரசிகரின் கேள்விக்கு நடிகர் ஸ்ரீமன் பதிலளித்துள்ளார்.

கடந்த 2002-ம் ஆண்டு பி.எல்.தேனப்பன் தயாரிப்பில் கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் வெளியான படம் ‘பஞ்ச தந்திரம்’. இதில் கமல்ஹாசன், ரமேஷ் அரவிந்த், ஜெயராம், ஸ்ரீமன், யூகி சேது, சிம்ரன், ரம்யாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் பலரும் ‘பஞ்ச தந்திரம் 2’ எப்போது என்று சமூக வலைதளத்தில் ஸ்ரீமனிடம் கேள்வி எழுப்பியுள்ளார்கள். அவர்களுக்குப் பதிலளிக்கும் விதமாக ஸ்ரீமன் கூறியிருப்பதாவது,

“உங்களில் பலர் மீண்டும் மீண்டும் 'பஞ்ச தந்திரம்' இரண்டாம் பாகம் வருமா என்று கேட்கிறீர்கள். எனக்குத் தெரிந்த பதில் என்னவென்றால் கமல்ஹாசன் சார் முடிவு செய்தால் அது நடக்கும். இது நடக்குமா இல்லையா என்று அறிய உங்களைப் போலவே ஒட்டுமொத்த படக்குழுவும் காத்திருக்கிறது.” என்று தெரிவித்துள்ளார்.


 

From around the web