‘பீஸ்ட்’ படத்தில் ராணுவ அதிகாரியாக நடிக்கும் விஜய்?

 
Beast

நெல்சன் இயக்கி வரும் ‘பீஸ்ட்’ படத்தில் விஜய் ராணுவ அதிகாரியாக நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘பீஸ்ட்’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்தப் படத்தில் செல்வராகவன், யோகி பாபு, பூஹா ஹெக்டே, விடிவி கணேஷ், லிலிபுட் ஃபரூக்கி, ஷைன் டாம் சாக்கோ, அபர்ணா தாஸ், அன்குர் அஜித் விகால் உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்து வருகிறார்கள். ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா, இசையமைப்பாளராக அனிருத், எடிட்டராக நிர்மல், கலை இயக்குநராக கிரண் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு முதலில் ஜார்ஜியாவில் தொடங்கப்பட்டது. அதன் பிறகு சென்னை திரும்பிய படக்குழு அங்கு படத்தின் பிரதான காட்சிகளுக்காகப் பிரம்மாண்டமான ஷாப்பிங் மால் அமைத்துப் படப்பிடிப்பு நடத்தியது.

தற்போது ஒரு முக்கியக் காட்சிக்காக மீண்டும் ஜார்ஜியா செல்லவிருக்கிறது ‘பீஸ்ட்’ படக்குழு. படக்குழுவினருடன் விஜய்யும் இந்த மாதம் ஜார்ஜியா செல்ல இருப்பதாகக் கூறப்படுகிறது. அங்கு படப்பிடிப்பை முடித்துவிட்டு மீண்டும் சென்னை திரும்பி, எஞ்சியிருக்கும் காட்சிகளைப் படக்குழு முடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் ஜார்ஜியாவில் காஷ்மீர் போல செட் அமைத்து ராணுவம் தொடர்பான காட்சிகளைப் படமாக்கப் படக்குழு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் படத்தில் விஜய் ராணுவ அதிகாரியாக நடிப்பதாகவும் கூறப்படுகிறது.

ஜார்ஜியா படப்பிடிப்பு நிறைவடைந்ததும் டப்பிங், எடிட்டிங் உள்ளிட்ட இறுதிக்கட்டப் பணிகளை ஒரே கட்டமாக முடித்து அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் படத்தைத் திரையரங்குகளில் வெளியிடப் படக்குழு திட்டமிட்டு வருகிறது.

From around the web