எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் - நடிகர் சித்தார்த்

 
எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் - நடிகர் சித்தார்த்

நடிகர் சித்தார்த் பாஜகவை விமர்சித்து வரும் நிலையில், தனக்கு கொலை மிரட்டல்கள் வருவதாக தெரிவித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருபவர் சித்தார்த். இவர் வலைத்தள பக்கத்தில் சமூக, அரசியல் கருத்துக்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். வட மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடுகளை கண்டிக்கும் வகையில் பாஜகாவையும் விமர்சித்து பதிவுகள் வெளியிடுகிறார்.

சமீபத்தில் மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி அமைந்தால் இலவச தடுப்பூசி போடப்படும் என்ற பதிவுக்கு பதிலடியாக பாஜக அதிகாரத்தில் இருந்து தூக்கி எறியப்படும்போதுதான் தடுப்பூசி போட்டுக்கொண்டதாக அர்த்தம் என்றார்.

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு உள்ளது என்று பொய் சொன்னால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அங்குள்ள பாஜக முதல்வர் யோகி ஆதித்யநாத் சொன்ன கருத்தை விமர்சித்து துறவியோ, தலைவரோ யாராக இருந்தாலும் பொய் சொன்னால் முகத்தில் அறைவிழும் என்றார்.

சித்தார்த் கருத்துக்கள் பாஜகவினருக்கு கோபத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் தனக்கு கொலை மிரட்டல்கள் வருவதாக சித்தார்த் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “எனது போன் நம்பரை தமிழக பா.ஜனதா கட்சியினர் வெளியிட்டு இருக்கிறார்கள். இதனால் 500-க்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்தன. எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல். பாலியல் மிரட்டல்கள் விடுத்துள்ளனர். அவர்கள் போனில் பேசியதை பதிவு செய்து போலீசிடம் ஒப்படைத்துள்ளேன். நான் பேசுவதை நிறுத்த போவதில்லை” என்று பதிவிட்டுள்ளார்.

From around the web