இது போன்ற அருவருப்பான செயல்களில் ஈடுபட வேண்டாம் - ரசிகர்களுக்கு அட்வைஸ் கொடுத்த ரஜினி ரசிகர் மன்றம்

 
Rajini-Fans

‘அண்ணாத்த’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டை கொண்டாடும் விதமாக ரஜினி ரசிகர்கள், ஆட்டின் தலையை கொடூரமாக வெட்டி பலி கொடுத்த சம்பவத்திற்கு அகில இந்திய ரஜினிகாந்த் ரசிகர் மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது

சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘அண்ணாத்த’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் குஷ்பு, மீனா, நயன்தாரா, பிரகாஷ் ராஜ், கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் உள்ளிட்ட பலர் ரஜினியுடன் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக வெற்றி, இசையமைப்பாளராக இமான் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

Rajini-Fans

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அண்ணாத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டனர். இதை ரஜினி ரசிகர்கள் கொண்டாடினார்கள். அப்போது அண்ணாத்த ஃபர்ஸ்ட் லுக் கட்-அவுட்டிற்கு ரசிகர்கள் ஆடுவெட்டி ரத்தாபிஷேகம் செய்த காட்சி இணையத்தில் வைரலானது.

கட்-அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்தது போய் தற்போது ஆட்டை பலி கொடுத்து ரத்தாபிஷேகம் செய்கிற நடிகர் ரஜினிகாந்த ரசிகர்களின் காட்டுமிராண்டித்தனத்தை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது என்று தெரிவித்திருந்தனர்.

Rajini-Fans_Association

இந்நிலையில் அகில இந்திய ரஜினிகாந்த் ரசிகர் மன்றமும் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள கடிதத்தில், அண்ணாத்த திரைப்பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மீது ஒரு சிலர் ஆடு வெட்டி இரத்த அபிஷேகம் செய்வது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இது வன்மையாக கண்டிக்கதக்கது மட்டுமின்றி மிகவும் வருந்தத்தக்கது. அருவருப்பான இது போன்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாமென்று அன்புடன் கேட்டு கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளனர்.

From around the web