“அச்சமில்லை, அச்சமில்லை அச்சமென்பதில்லையே...” மாணவர்களுக்கு நடிகர் சூர்யா வேண்டுகோள்

 
Surya

ஒரு அண்ணனாக வேண்டி கேட்டுக்குறேன் என்று மாணவர்களுக்கு நடிகர் சூர்யா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மருத்துவ படிப்புக்கான நுழைவுத்தேர்வான ‘நீட்’ கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாட்டை பொறுத்தவரை 18 நகரங்களில் 224 தேர்வு மையங்களில் நீட் தேர்வு நடைபெற்றது. இதில் 1 லட்சத்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர்.

இதற்கிடையில், நீட் தேர்வில் தோல்வியடைந்துவிடுவோம் என நினைத்து சில மாணவ-மாணவிகள் தற்கொலை என்ற தவறான முடிவை எடுத்துவருகின்றனர்.

இந்நிலையில், நீட் தேர்வால் மாணவர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்துக் கொள்ளும் நிலையில் மாணவர்களுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக நடிகர் சூர்யா வீடியோ வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே. உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே என்ற பாரதியாரின் பாடல்வரிகளுடன் தனது உரையை தொடங்குகிறார்.

மாணவ மாணவிகள் எல்லோரும் வாழ்க்கையில் அச்சமில்லாமல் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என்று உங்களை ஒரு அண்ணனாக வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். உங்களுக்கு போன வாரம் அல்லது போன மாசம் இருந்த ஏதோ ஒரு பெரிய கவலை அல்லது வேதனை இப்போ இருக்கிறதா.


யோசிச்சு பாருங்க. நிச்சயமாக குறைந்திருக்கும். இல்லாமல் கூட போயிருக்கும். தேர்வு, உயிரை விட பெரிதல்ல ஒரு பரிட்சை உங்களது உயிரை விடப் பெரியது இல்லை. உங்க மனசுக்கு கஷ்டமா இருக்கா நீங்க நம்புறவங்க, உங்களுக்கு ரொம்ப பிடிச்சவங்க, அப்பா அம்மா இல்ல ஒரு பெரியவங்க, நண்பர்கள் ஆசிரியர்கள் யாரிடமாவது மனதை விட்டு பேசுங்கள்.

எல்லாவற்றையும். பயம், கவலை, வேதனை, விரக்தி எல்லாம் கொஞ்ச நேரத்தில் மறையும் விடயங்கள். தற்கொலை, வாழ்க்கையை முடித்துக் கொள்கிறேன் என்றும் முடிவு செய்வதெல்லாம் உங்களை ரொம்ப விரும்புபவர்களுக்கு, அப்பா அம்மா குடும்பத்தினருக்கு நீங்கள் கொடுக்கும் வாழ்நாள் தண்டனை, மறந்துவிடாதீர்கள்.

நான் நிறைய தேர்வுகளில் ஃபெயிலாகி இருக்கிறேன். குறைவான மார்க் வாங்கி இருக்கிறேன். அதனால் உங்களில் ஒருவனாக நிச்சயமாக சொல்ல முடியும். மதிப்பெண், தேர்வு இது மட்டுமே வாழ்க்கை அல்ல. சாதிக்கிறதுக்கு அத்தனை விஷயங்கள் இருக்கு. உங்களை புரிந்து கொள்ளவும் நேசிக்கவும் நிறைய பேர் இருக்கோம்.

நம்பிக்கையா.. தைரியமாக இருந்தால் வாழ்க்கையில் எல்லாரும் ஜெயிக்கலாம். நிச்சயமாக ஜெயிக்கலாம். அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே என பேசியிருக்கிறார்.

From around the web