மணிரத்னம்... பெயரை கேட்டவுடனே நம் நினைவுக்கு வருவது சுருக்கமான வசனமும், புதுமையான காதல் களமும்...

 
Mani-Ratnam

இந்திய சினிமாவின் தலைசிறந்த திரைப் படைப்பாளிகளில் ஒருவரான மணிரத்னம் இன்று (ஜூன் 2) தன்னுடைய பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.

மணிரத்னம்... இந்தப்பெயரை கேட்டவுடனே நம் நினைவுக்கு வருவது சுருக்கமான வசனமும், புதுமையான காதல் களமும்... இவரது இயற்பெயர் கோபால ரத்னம் சுப்பிரமணியம். வளர்ந்து வரும் அத்தனை இயக்குனரும் தவிர்க்க முடியாத சகாப்தம் மணிரத்னம். காதல் படங்களின் திரைக்கதைக்கு இலக்கணம் வகுத்தவர். இவரின் மௌனராகம், நாயகன் போன்ற படங்கள் காலம் பேசும் காவியமாக போற்றப்படுகிறது.

பிறப்பு

1956-ம் ஆண்டு ஜூன் 2-ம் தேதி இவர் பிறந்தார். சிவாஜி கணேசன் மற்றும் நாகேஷ் அவர்களால் பெரிதும் ஈர்க்கப்பட்டவர். இவரின் பதினைந்து வயதில் இயக்குநர் கே.பாலசந்தர் அவர்களின் ரசிகரானார். பள்ளிப்படிப்பை முடித்த பின்னர் ராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா கல்லூரியில் இளங்கலை வணிகவியல் படித்து முடித்தார்.

பின்னர் 1997-ம் ஆண்டு மும்பையில் முதுநிலை வணிக நிர்வாகம் படித்து பட்டம் பெற்றார். இதன் பின்பு மேலாண்மை ஆலோசகராய் ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்தார், அந்த வேலையின் மீதான அதிருப்தி இவரை சினிமாவின் பக்கம் திருப்பியது.

சினிமா வாழ்க்கை

மணிரத்தினத்தின் நண்பனும் பழம்பெரும் இயக்குனர்  பி.ஆர்.பந்தலுவின் புதல்வனுமான ரவி ஷங்கர் தன்னுடைய முதல் கன்னட திரைப்படத்தை எடுக்கவிருந்தார் அவருடன் மணிரத்தினமும் அவரின் நண்பனும் பழம்பெரும் இயக்குனர் எஸ்.பாலச்சந்தரின் மகனான ராமன் என்பவருடன் சேர்ந்து படத்தின் கதை, திரைக்கதை ,வசனம் ஆகியவற்றை எழுதி முடித்தார். படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ள தன் வேலையை  விட்டுவிட்டு கர்நாடகா சென்றார் .கன்னட திரை பிரபலம் விஷ்ணுவர்தன், ரோஜா ரமணி, லக்ஷ்மி என்று நட்சத்திர பட்டாளம் அணிவகுக்க தொடங்கவிருந்த படம் நிறுத்தப்பட்டுவிட்டது.

என்ன ஆகினும் இயக்குனராக வேண்டும் என்பது அவர் எண்ணமாக இருந்தது. கையில் ஒரு கதையை வைத்துக்கொண்டு தயாரிப்பாளரிடம் கதை சொல்லலாம் இல்லையென்றால் கே.பாலச்சந்தர் , பாரதிராஜா , மகேந்திரன் போன்ற பெரிய இயக்குனர்களிடம் கதைகளைக் கூறி அவர்களுடன் இணைத்து பணியாற்றலாம் என்றிருந்தார். ஆனால் மூவருமே அதற்குச் சம்மதிக்கவில்லை. இந்தச் சூழலில் அந்தக் கதையைக் கன்னடத்தில் குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்க முன்வந்தார் மணிரத்னத்தின் உறவினர்.  

1983-ல் வெளியான “பல்லவி அனுபல்லவி” திரைப்படத்தின் மூலம் ஒரு இயக்குநராக சினிமாவில் அடியெடுத்து வைத்தார் மணிரத்னம். இந்த படம் அவருக்கு 1983-ம் ஆண்டு கர்நாடக அரசின் சிறந்த திரைக்கதாசிரியர் விருதை பெற்று தந்தது. இந்தப்படம் 1984-ல் அவருக்கு “உணரு” என்ற மலையாள படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்று தந்தது.

1985-ல் “பகல் நிலவு” படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தார். இதன் பின்னர் அதே ஆண்டில் அவர் “இதய கோவில்” என்ற படத்தை இயக்கினார். உணரு, பகல் நிலவு, இதய கோவில் மூன்று படங்களும் வெற்றி பெறாத நிலையில், அடுத்து 1986-ம் ஆண்டு மணி ரத்தினம் எழுதி இயக்கிய மௌனராகம் மக்களிடமும் விமர்சகர்களிடமும் பெரிய வரவேற்பை பெற்று தந்தது. இந்த படம் தான் மணிரத்தினம் என்ற சகாப்தத்தின் அடித்தளம்.

கிட்டத்தட்ட நான்கு தசாப்தங்களை நிறைவுசெய்யவிருக்கும் மணிரத்னம் திரைவாழ்வில் தலைமுறைகளைக் கடந்து ரசிகர்களை ஈர்த்துக் கொண்டேயிருக்கும் காலத்தால் அழிக்க முடியாத பல படைப்புகள் வந்துள்ளன. 'மெளன ராகம்', 'நாயகன்', 'தளபதி', 'அக்னி நட்சத்திரம்', 'அஞ்சலி’, 'ரோஜா', 'பம்பாய்', 'இருவர்', 'அலைபாயுதே', 'கன்னத்தில் முத்தமிட்டால்', 'ஓ காதல் கண்மணி' என அந்தப் பட்டியல் நீள்கிறது.

அவருடைய பிரம்மாண்டப் படைப்புகளில் ஒன்றான 'இருவர்' படுதோல்வி அடைந்தது. ஆனால், அது வெளியாகி ஆண்டுகள் கழித்து அந்தப் படத்தைக் கொண்டாடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. கூகுளிலோ யூடியூபிலோ தேடுதளத்தில் இருவர் என்று தட்டச்சு செய்தால் அந்தப் படத்தின் சிறப்புகளை, நுட்பங்களை விளக்கும் ஆழமான செறிவான கட்டுரைகளும் காணொலிகளும் கிடைக்கும்.

அதேபோல் அவருடைய பல படங்களில் விவரிக்கத் தவறிய சிறப்புகளும் நுட்பங்களும் தற்போது அலசப்பட்டுக் கொண்டிருக்கின்றன. காலத்தைக் கடந்து ரசிக்கப்படுவதும் ரசிகர்கள் ஆழ்ந்து தேடிக் கண்டடைய வைக்கும் நுட்பங்கள் பொதிந்த படைப்புகளை உருவாக்குவதுமே ஒரு கலைப் படைப்பாளியின் உயரத்தைத் தீர்மானிக்கிறது. அந்த வகையில் இந்தியத் திரைவானில் மணிரத்னம் மிகப் பெரிய உயரத்தில் நிற்கிறார்.

தற்போது மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்தை வைத்து 'பொன்னியின் செல்வன்' என்ற படத்தை இயக்கி வருகிறார்.

தயாரிப்பாளர்

இவரின் பாம்பே படம் முதல் காற்று வெளியிடை வரை இவரின் சொந்த தயாரிப்பு நிறுவனமான மெட்ராஸ் டாக்கீஸ் கொண்டு இவரே தயாரித்தவை. இவர் இயக்கிய படங்கள் அல்லாமல் பிற இயக்குனர்களின் படங்கள் சிலவற்றையும் தயாரித்துள்ளார். சத்ரியன், தசரதன், ஆசை, நேருக்குநேர், டும் டும் டும் ,5 ஸ்டார்,சாத்தியா,ஓகே ஜானு ஆகியவை இவர் தயாரித்த பிற இயக்குனரின் படங்கள்.

மணிரத்னத்தின் தணியாத கலைத் தாகமும் வற்றாத நீரூற்றான அவருடைய படைப்பாளுமையும் இன்னும் பல ஆண்டுகளுக்கு இதே உற்சாகத்துடனும் அர்ப்பணிப்போடும் அவரை இயங்க வைக்கும். ரசிகர்கள் அவருடைய திரைப்படங்களைக் காணக் காத்திருப்பார்கள். அவரை ஆதர்சமாகக் கருதும் ரசிகர்களும் படைப்பாளிகளும் அதிகரித்துக்கொண்டே இருப்பார்கள்.

From around the web