கொரோனா இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம்... கொரோனாவை வெல்வோம்! நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

 
Aishwarya-Rajesh

கொரோனா தடுப்பு விதிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும் என நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் விழிப்புணர்வு வீடியோ மூலம் வலியுறுத்தி உள்ளார்.

இந்தியாவில் கொரோனா தொற்றின் 2வது அலை காரணமாக மிக மோசமான பாதிப்புகளும், உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன. இதனை கட்டுப்படுத்த தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலர் பொதுமக்களுக்கு தங்களால் முடிந்த விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி, உதவிகளும் செய்து வருகின்றனர்.

அந்த வகையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், விழிப்புணர்வு வீடியோ ஒன்றின் மூலமாக தமிழக மக்களிடம் கொரோனா தடுப்பு விதிமுறைகளை தவறாமல் கடைப்பிடிக்குமாறு வலியுறுத்தியுள்ளார். அந்த வீடியோவில்,

“நாம் இப்போது கொரோனா 2-வது அலையில் இருக்கிறோம். இது நம் எல்லோருக்குமே தெரியும். முதல் அலையைவிட இரண்டாவது அலை நிறைய பேரை பாதித்துள்ளது. முக்கியமாக இதய நோய், ஆஸ்துமா உள்ளிட்ட உடல் நல பிரச்சினை உள்ளவர்களை நிறையவே பாதித்து உள்ளது. தயவு செய்து வீட்டில் இருந்து வெளியே வராதீர்கள்.

அப்படி ஒருவேளை அவசர தேவையாக வெளியே வர வேண்டும் என்றால் இரண்டு முக கவசம் போட்டுக் கொள்ளுங்கள். அதுமட்டுமன்றி கைகளை எப்போதும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். கிருமி நாசினி பயன்படுத்துங்கள்.

முக்கியமாக குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், வயதானவர்கள் மிகவும் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். கொரோனா இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம். கொரோனாவை வெல்வோம். மக்களை காப்போம். நம்மையும் காப்போம். நாட்டையும் காப்போம்.” என்று கூறியுள்ளார்.


 

From around the web