உயர்மட்ட உதவிகளைத் தேடி வெறித்தனமாக ஓடிக்கொண்டிராமல் எளிமையாகக் கையாளுங்கள்! மதுவந்திக்கு ஜேம்ஸ் வசந்தன் அட்வைஸ்!!

 
James Vasanthan

பத்மா சேஷாத்திரி பள்ளி ஆசிரியரின் பாலியல் வன்கொடுமைப் பிரச்சனையில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி திமுக அரசுக்கு பகீரங்க சவால் விடுத்துள்ள நிலையில், ஒய்.ஜி.மகேந்திரனின் மகள் மதுவந்திக்கு இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் அறிவுரை கூறியுள்ளார்.

“அன்புள்ள மதுவந்தி, படித்த, வசதியான, ஒரு உயர்ந்த குடும்பத்தில் பிறந்து வளர்ந்த, நல்ல திறமைசாலியான நீ உணர்ச்சிவசப்படாமல், கொஞ்சம் நிதானித்து, நம்மூர்ப்பக்கம் சொல்கிற மொழியில் சொன்னால் 'கொஞ்சம் சூதானமா' இருந்திருந்தால்,"என் பாட்டியின் பள்ளியின் பெயர் கெட்டுப்போக விடமாட்டேன்" என்று நீ நினப்பது போலவே ஒரு பிரச்சனை இல்லாமல் போயிருக்கும்.

எப்ப இப்படி ஒரு அசம்பாவிதம் சில பெண் குழந்தைகளுக்குத் உங்கள் பள்ளியில் நடந்துவிட்டதோ, உடனே அந்தக் குழந்தைகளின் நலனுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அந்தப் பெற்றோருக்கு ஆறுதல் சொல்லி, "அவனை விடமாட்டேன்" என்கிற தொனியில் மக்களிடம் ஒரு சிறு வேண்டுகோள் விடுத்து, "இந்த இக்கட்டான நேரத்தில் என்னோடும், எங்கள் பள்ளியோடும் துணை நில்லுங்கள். இப்படி ஒரு தவறானவன் உள்ளே இருந்திருக்கிறான். அவன் செய்த தவறுக்கு அவனுக்கு தண்டனை வாங்கிக்கொடுக்காமல் விடமாட்டோம். இனி இப்படி நிகழாமல் பார்த்துக்கொள்வோம்!" என்கிற கோணத்தில் அணுகியிருந்தால், தமிழகமே கூட நின்றிருக்கும்.

அவசரம் அவசரமாக தந்தையும், நீயும் கொடுத்தத் தொடர் பேட்டிகளினாலும், அதில் ஒலித்த உங்கள் தவறானத் தொனியினாலும், "நாங்கள் பிராமணர், இந்துக்கள்" போன்ற தேவையற்ற விஷயங்களை இதற்குள் கொண்டுவந்ததால் இப்போது தேனீக்கூட்டைக் கலைத்ததுபோல ஆகிவிட்டது.

யாரைப் பற்றி எந்த அம்சத்தை இந்த சமூகம் விவாதிக்க வேண்டுமோ, எவனை எல்லோரும் திட்டித் தீர்க்க வேண்டுமோ, அவனை நோக்கி எல்லார் கோபமும் திரும்ப வேண்டுமோ, அதையெல்லாம் வலிய உங்கள் தலைமீது நீங்களே இழுத்துப் போட்டுக்கொண்டீர்கள். தவறு செய்தவன் ஒரு சிற்றறைக்குள் அமைதியாக இருக்கிறான். நீங்கள் ஊரெங்கும் அலைக்கழிக்கப்படுகிறீர்கள்.

இப்போதும், இதை இன்னும் அசிங்கப்படுத்தாமல், அலங்கோலப்படுத்தாமல், தேவையற்ற உயர்மட்ட உதவிகளைத் தேடி வெறித்தனமாக ஓடிக்கொண்டிராமல், கொஞ்சம் நிதானித்து, மக்களிடம் கனிவாக, பண்போடு பேசுங்கள்.

தவறு எவனுடையதோ, நீங்கள் எதற்கு அவமானப்பட வேண்டும்? அவனிடம் இருந்து எட்ட நின்று அந்தக் குழந்தைகள், பெற்றோர், மக்கள் பக்கம் நின்று சிந்தியுங்கள். உணர்ச்சிவசப்படாமல் இதை எளிமையாகக் கையாளுங்கள்" என்று கூறியுள்ளார்.

From around the web