ஜெயலலிதாவின் முதல் ஹீரோ; பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்த் காலமானார்

 
Srikanth

பழம்பெரும் தமிழ் நடிகர் ஸ்ரீகாந்த் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 76.

1965-ம் ஆண்டில் இயக்குனர் ஸ்ரீதரின் வெண்ணிற ஆடை திரைப்படத்தில் அறிமுகமானார் ஸ்ரீகாந்த். 'வெண்ணிற ஆடை' படத்தில் டாக்டராக நடித்த இவரது நடிப்பு பெரியளவில் பேசப்பட்டது. 200-க்கும் படங்களுக்கு மேல் நடித்துள்ள ஸ்ரீகாந்த் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் சிறப்பாக நடித்து பெயர் பெற்றார். சுமார் 50 படங்களில் கதாநாயகனாக ஸ்ரீகாந்த் நடித்துள்ளார். 

சிவாஜி, கணேசன், முத்துராமன், ஜெய்சங்கர், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட நடிகருடன் இணைந்து நடித்தவர் ஸ்ரீகாந்த். எம்.ஜி.ஆருடன் இணைந்து அவர் எந்த படத்திலும் நடிக்கவில்லை.

ராஜா வெங்கட்ராமன் என்ற தனது பெயரை, சினிமாவிற்காக ஸ்ரீகாந்த் என மாற்றிக் கொண்டவர். ஜெயலலிதா அறிமுகமான வெண்ணிற ஆடை படத்தில் தான் இவரும் அறிமுகமானார் என்பதால், இவர் ஜெயலலிதாவிற்கும் மிக நெருங்கிய நண்பர் ஆவார்.

வெண்ணிற ஆடை, நாணல், ராஜபார்ட் ரங்கதுரை, அன்புத்தங்கை, வைரம், பைரவி, தங்கப்பதக்கம், நூற்றுக்கு நூறு, காதல் கொண்டேன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். 1974 ம் ஆண்டு வெளியான திக்கற்ற பார்வதி படத்தில் இவர் ஹீரோவாக நடித்திருந்தார். இந்த படம் சிறந்த படத்திற்கான தேசிய விருதினை பெற்றது.

2017-ம் ஆண்டு தான் ஸ்ரீகாந்த்திற்கு சதாபிஷேகம் நடைபெற்றது. ஈரோட்டில் பிறந்த ஸ்ரீகாந்த், தங்கப்பதக்கம் படத்தில் சிவாஜியின் மகனாக நடித்து மிகப் பெரிய பாராட்டை பெற்றவர். மங்கை என்ற டிவி சீரியலிலும் நடித்துள்ளார்.

76 வயதான ஸ்ரீகாந்த் உடல் நலக்குறைவால் இன்று காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

From around the web