என்னால் நடிகர் சூர்யாவுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருத்த‌த்தை பதிவு செய்ய விரும்புகிறேன்: இயக்குநர் ஞானவேல்

 
Gnanavel-Suriya

இயக்குனராக என்னால் நடிகர் சூர்யாவுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருத்த‌த்தை பதிவு செய்ய விரும்புகிறேன் என இயக்குநர் ஞானவேல் தெரிவித்துள்ளார்.

உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இயக்குநர் தா.செ.ஞானவேல் ‘ஜெய் பீம்’ என்ற திரைப்படத்தை, எழுதி இயக்கியிருந்தார். இந்தப் படத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரெஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்து அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது.

இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், பல்வேறு திரையுலக பிரபலங்கள் பாராட்டு தெரிவித்தனர்.

ஆனால், இந்தப் படத்திற்கு பாமக தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது. சமூக வலைத்தளங்களிலும் சூர்யாவுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பதிவுகள் வெளியிடப்பட்டன. அதேவேளையில், சூர்யாவுக்கு ஆதரவாகவும் பலர் குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், ஜெய்பீம் பட இயக்குநர் த.செ.ஞானவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“தனிப்பட்ட நபரையோ, குறிப்பிட்ட சமுதாயத்தையோ அவமதிக்கும் எண்ணம் சிறிதளவும் இல்லை. ஜெய்பீம் பட விவகாரத்தில் சூர்யாவை பொறுப்பேற்கச்சொல்வது துர்தஷ்டவசமானது. பழங்குடியின மக்களின் துயரங்களை அனைவருக்கும் கொண்டு சேர்ப்பது மட்டுமே சூர்யாவின் நோக்கம்.

சில வினாடிகள் மட்டுமே வரும் அந்த காலண்டர் ஷூட்டிங்கின் போது எங்கள் கவனத்தில் பதியவில்லை. குறிப்பிட்ட சமூகத்தின் குறியீடாக அந்த காலண்டரை காட்டுவது என்பது எங்களின் நோக்கமல்ல. இயக்குநராக நான் மட்டுமே பொறுபேற்க வேண்டிய விஷயம் இது.  இதன் பொருட்டு மன வருத்தம் அடைந்தவர்கள், புண்பட்டவர்களுக்கு வருத்தத்தை தெரிவிக்கிறேன்.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web