பிரபல நடிகை கார் டிரைவரால் கடத்தபட்டாரா..?

 
Sanjana-Galrani

வேறு பாதையில் சென்றதால் என்னை கடத்தி செல்வதாக நினைத்து தகராறு செய்தேன் என்றும், நான் எந்த தவறும் செய்யவில்லை என்றும் கார் டிரைவருடனான மோதல் குறித்து நடிகை சஞ்சனா விளக்கம் அளித்துள்ளார்.

கன்னட திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் சஞ்சனா கல்ராணி. இவர், கடந்த ஆண்டு போதைப்பொருட்கள் விற்பனை மற்றும் போதைப்பொருள் பயன்படுத்தியதாக மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.

இந்த வழக்கில் தற்போது அவர் ஜாமீனில் வெளியே இருந்து வருகிறார். நடிகை சஞ்சனா போதைப்பொருட்கள் பயன்படுத்தி இருப்பது தடய அறிவியல் ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், பெங்களூரு இந்திராநகரில் இருந்து நேற்று முன்தினம் காலையில் வாடகை காரில் ராஜராஜேசுவரிநகரில் நடந்த சினிமா படப்பிடிப்பில் கலந்து கொள்ள நடிகை சஞ்சனா சென்றார். அப்போது காரில் ஏ.சி. போடும் விவகாரம் தொடா்பாக சஞ்சனாவுக்கும், டிரைவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

அந்த சந்தர்ப்பத்தில் டிரைவர் சூசை மணியை சஞ்சனா தகாத வார்த்தையில் திட்டியதாக தெரிகிறது. இந்த சம்பவம் தொடர்பாக ராஜராஜேசுவரிநகர் போலீஸ் நிலையத்தில் நடிகை சஞ்சனா மீது டிரைவர் சூசை மணி புகார் அளித்துள்ளார். அந்த புகாரை போலீசார் பெற்றுக் கொண்டுள்ளனர். அத்துடன் சஞ்சனா தகாத வார்த்தையில் திட்டுவது தொடர்பான வீடியோ ஆதாரங்களையும் போலீசாரிடம் சூசைமணி வழங்கி உள்ளார்.

அதன்பேரில், ராஜராஜேசுவரிநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக நடிகை சஞ்சனா நேற்று விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து நடிகை சஞ்சனா நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது,

இந்திராநகரில் இருந்து ராஜராஜேசுவரிநகருக்கு நான் வாடகை காரில் சென்றேன். என்னிடம் சொந்தமாக கார் இல்லை. ஏற்கனவே இருந்த காரை கணவர் பயன்படுத்துகிறார். சினிமாவில் நடிக்கும் வாய்ப்பும் கிடைக்கவில்லை. என்னிடம் பணமும் இல்லை. அதனால் தான் வாடகை காரில் சென்றேன். சொந்தமாக யூ-டியூப் சேனல் நடத்தி வருகிறேன். ஒரு சினிமா படப்பிடிப்பு நடந்த ராஜராஜேசுவரிநகருக்கு செல்ல வேண்டும் என்று டிரைவரிடம் கூறினேன்.

ராஜராஜேசுவரிநகருக்கு செல்வதற்கு பதிலாக கெங்கேரி நோக்கி கார் சென்றது. கார் வேறு பாதையில் சென்றதால், என்னை கடத்தி செல்வதாக உணர்ந்தேன். அதுபற்றி மட்டுமே டிரைவரிடம் கேட்டு தகராறு செய்தேன். அவரை தகாத வார்த்தையில் திட்டவில்லை. இந்த விவகாரத்தில் நான் எந்த ஒரு தவறும் செய்யவில்லை. என் மீது டிரைவர் போலீசில் புகார் அளித்துள்ளார். எனது தரப்பு நியாயம் பற்றி போலீசாரிடம் தெரிவிப்பேன்.

நான் மேக்கப் போடாத காரணத்தால், என்னை யாரும் அடையாளம் கண்டு கொள்ள முடியாது. மேக்கப் போடாமல் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருவேன். டிரைவருக்கும் நான் யார்? என்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. கார் டிரைவர் தவறான பாதையில் சென்றது பற்றி கேட்டதால் தான் என் மீது போலீசில் புகார் அளித்துள்ளார். நான் ஒரு நடிகை என்பதால், இந்த விவகாரம் பெரிய பிரச்சினையாக பார்க்கப்படுகிறது.
 
இவ்வாறு நடிகை சஞ்சனா கூறினார்.

sanjana-galrani

இந்த சம்பவம் குறித்து நடிகை சஞ்சனாவிடமும், கார் டிரைவரிடமும் போலீசார் விசாரித்து தகவல்களை பெற்று உள்ளனர். மேலும் 2 பேரையும் சமாதானப்படுத்தி போலீசார் அனுப்பி வைத்து உள்ளனர். இதற்கிடையில், கார் டிரைவருடன் நடந்த மோதல் விவகாரத்தில் சமூக வலைதளங்களில் நடிகை சஞ்சனா காரில் கடத்தப்பட்டு இருப்பதாக தகவல்கள் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த விவகாரம் குறித்து கார் டிரைவர் சூசைமணி நிருபர்களிடம் கூறுகையில், கொரோனா காரணமாக 3 பேரை தான் காரில் ஏற்ற வேண்டும் என்று விதிமுறை உள்ளது. ஆனால் சஞ்சனாவுடன், மேலும் 3 பேர் ஏறினார்கள். அதுபற்றி நான் எதுவும் சொல்லவில்லை. கொரோனா காரணமாக காரில் ஏ.சி.யை குறைத்து வைத்திருந்தேன். ஏ.சி.யை அதிகரிக்கும்படி கூறி என்னுடன் சஞ்சனா வாக்குவாதம் செய்தார்.

தகாத வார்த்தையில் திட்டினார். அதற்கான வீடியோ ஆதாரமும் உள்ளது. போலீசாரிடமும் புகார் அளித்துள்ளேன். நான் சஞ்சனாவை கடத்தி சென்றதாக தவறான குற்றச்சாட்டு பரவி வருகிறது. ஜி.பி.எஸ். யை பார்த்து சரியான பாதையில் தான் காரை ஓட்டிச் சென்றேன். நான் வேறு பாதையில் செல்லவில்லை. என்றார்.

From around the web