பிரபல நடிகைக்கு ரூ.20 லட்சம் அபராதம் விதித்த நீதிமன்றம்..! என்ன காரணம்?

 
Juhi-Chawla

5ஜி தொழில்நுட்பம் தொடரபாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடிகை ஜூகி சாவ்லா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து ரூ.20 லட்சம் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

உலகம் முழுவதும் அடுத்த சில வருடங்களில் தொலைத்தொடர்பு சேவைக்கான 5ஜி தொழில்நுட்பம் பயன்படுத்தப்படவுள்ளது. ஆனால், 5ஜி தொழில்நுட்பத்தால் உருவாகும் கதிர்வீச்சு பூமியில் அத்தனை உயிர்களையும் பாதிக்கும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் 5ஜி தொழில்நுட்பத்தை அமல்படுத்துவதற்கு எதிராக நடிகையும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான ஜூகி சாவ்லா டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அந்த மனுவில் மனிதர்கள் மட்டுமல்லாமல், விலங்குகள், பறவைகள், பூச்சிகள், தாவரங்கள் என அத்தனையும் இந்தக் கதிர்வீச்சினால் பாதிக்கப்படும் என்றும், இன்றைக்கு இருப்பதை விட 100 மடங்கு அதி தீவிரமாக இவை பாதிக்கும் என்றும் கூறியுள்ளார். இதனால் ஏற்படும் பாதிப்புகளைச் சரி செய்யவே முடியாது என்று  கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள் ஜூஹி சாவ்லாவின் மனுவை தள்ளுபடி செய்ததுடன், ‘சட்ட நடைமுறையை தவறாக பயன்படுத்தியதற்காக’ அனைத்து மனுதாரர்களுக்கும் ரூ .20 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளித்து உள்ளனர்.

காணொலி காட்சியிலான இந்த விசாரணையின் இணைப்பை ஜூகி சாவ்லா சமூக ஊடகங்களில் பரப்பியதாகவும், இந்த மனு "விளம்பரம் பெறுவதற்கான முயற்சி" என்று தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.

நடிகையின் வழக்குக்கு உறுதியான அடிப்படை இல்லை என்றும், "தேவையற்ற, அவதூறான மற்றும் மோசமான வாதங்களால்" நிரப்பப்பட்டதாகவும் நீதிபதிகள் கூறினர். இந்த விவகாரம் குறித்து அவர் முதலில் அரசாங்கத்திற்கு கடிதம் எழுதியிருக்க வேண்டும், தேவையற்ற வழக்குகளைத் தவிர்க்கவும் நீதிமன்றம் கேட்டு கொண்டது.

முன்னதாக இதுகுறித்து கூறிய நடிகை ஜூகி சாவ்லா "டெல்லி ஐகோர்ட்டில்  தாக்கல் செய்யப்பட்டுள்ள எங்கள் வழக்கு 5 ஜி தொழில்நுட்பத்திற்கு எதிரானது என்ற பொதுவான தவறான கருத்து இருப்பதாகத் தெரிகிறது. தொழில்நுட்ப முன்னேற்றங்களை நாங்கள் எதிர்க்கவில்லை. தொழில்நுட்ப உலகம் தரும் நவீன சாதனங்களை நாங்கள் பயன்படுத்துவதில் மகிழ்கிறோம். தொலைத்தொடர்பு சேவையிலும்தான். ஆனால், தொலைத்தொடர்பு சேவைக்கான சாதனங்களைப் பயன்படுத்தும்போது நாங்கள் தொடர் குழப்பத்தில் இருக்கிறோம்.

ஏனென்றால் நாங்களே சொந்தமாக ஆராய்ச்சி செய்து பார்த்ததில், வயர்லெஸ் சாதனங்களில் இருந்தும், அலைப்பேசி கோபுரங்களிலிருந்தும் வெளியேறும் கதிர்வீச்சினால் மக்களின் ஆரோக்கியத்துக்கு மிகப்பெரிய ஆபத்தை உண்டாக்கும் என்பதை நம்புவதற்குப் போதுமான ஆதாரங்கள் கிடைத்துள்ளன" என்று கூறி இருந்தார்.

From around the web