நடிகர் விஜய் மேல்முறையீடு வழக்கு வேறு அமர்வுக்கு மாற்றம் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

 
Vijay

நடிகர் விஜய் வழக்கினை, வரி மேல்முறையீடு அமர்வுக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த 2012-ம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் ரக காரை நடிகர் விஜய் இறக்குமதி செய்துள்ளார். இந்தக் காருக்கான அனுமதிக்கப்பட்ட வரிகளை செலுத்தியிருந்தார். ஆனால், தமிழ்நாடு அரசு விதிக்கும் நுழைவு வரியை எதிர்த்து நடிகர் விஜய் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், வழக்கை தள்ளுபடி செய்து அண்மையில் உத்தரவிட்டார். மேலும் நடிகர் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தும் உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து, இந்தத் தீர்ப்பை எதிர்த்தும், தன்னைப் பற்றிய விமர்சனத்தை எதிர்த்தும் நடிகர் விஜய் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று (ஜூலை 19) நீதிபதி எம்.எம்.சுரேஷ் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது வரி தொடர்பான மேல்முறையீடுகளை விசாரணை செய்யும் அமர்வுக்கு மாற்றம் செய்ய பதிவுத்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

தனிநீதிபதி தீர்ப்புக்கு நகல் இல்லாமல் மேல்முறையீட்டு மனு ஏற்றுக்கொள்ள அனுமதி கேட்ட வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து இந்த வழக்கு, வரி தொடர்பான மேல் முறையீட்டு விசாரணை செய்யும் நீதிபதிகள் துரைசாமி, ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

From around the web