ரியல் ஹீரோவாக இருங்கள்... ரீல் ஹீரோவா இருக்காதீங்க... விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம்

 
Vijay

வெளிநாட்டு சொகுசு காருக்கு வரி விதிக்க தடை கோரிய நடிகர் விஜய்க்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

கடந்த 2012-ம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் ரக காரை நடிகர் விஜய் இறக்குமதி செய்துள்ளார். இந்த காருக்கு நுழைவு வரி செலுத்த வணிக வரி துறை உதவி ஆணையர் உத்தரவு பிறப்பித்தார்.

இந்த உத்தரவை எதிர்த்தும் நுழைவு வரி விதிக்க தடை கோரியும் நடிகர் விஜய், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ரோல்ஸ் ராய்ஸ் காரை பதிவு செய்யாததால் அதனை பயன்படுத்த முடியவில்லை என்றும், நுழைவு வரி செலுத்த வேண்டும் என்ற உத்தரவிற்கு தடை விதிக்குமாறும் மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், மனுதாரர் தான் எந்த தொழில் செய்கிறோம் என்பதை மனுவில் குறிப்பிட வில்லை என்றும், வழக்கறிஞரிடம் கேட்டபோது தான் மனுதாரர் நடிகர் என்பதைத் தெரிவித்ததாகவும் குறிப்பிட்டார். புகழ் பெற்ற சினிமா நடிகர்கள் முறையாக, உரிய நேரத்தில் வரி செலுத்த வேண்டும் என்றும், வரி வருமானம் நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பு என்றும் நீதிபதி குறிப்பிட்டார்.

வரி என்பது கட்டாயமாக வழங்க வேண்டிய பங்களிப்பு தானே தவிர, தானாக வழங்க கூடிய நன்கொடை இல்லை எனவும் தனது உத்தரவில் நீதிபதி காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

மக்கள் செலுத்தக்கூடிய வரி தான், பள்ளிகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட அரசின் நல திட்டங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது என்றும், தமிழ்நாட்டில் நாடாளும் அளவிற்கு நடிகர்கள் வளர்ந்துள்ள நிலையில், அவர்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டுமே தவிர, ரீல் ஹீரோக்களாக இருக்கக் கூடாது என நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

சமூகநீதிக்கு பாடுபடுவதாக பிரதிபலிக்கும் நடிகர்கள்,வரி ஏய்ப்புச் செய்வது ஏற்றுக்கொள்ள இயலாது என்றும், வரிஏய்ப்பு என்பது தேசத்துரோகம் எனவும் குறிப்பிட்ட நீதிபதி, இறக்குமதி செய்யப்பட்ட காருக்கான நுழைவு வரியை 2 வாரங்களில் செலுத்த வேண்டும் என நடிகர் விஜய்க்கு உத்தரவிட்டார்.

மேலும், நடிகர் விஜய்யின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், ரூ. 1 லட்சம் அபராதம் விதித்து அதை முதல்வர் கொரோனா நிவாரண நிதிக்கு இரண்டு வாரத்தில் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

From around the web