வெங்கட் பிரபுவின் அடுத்த படம் குறித்து வரும் செய்திகள் எல்லாம் வதந்தி?

 
Venkat-Prabhu

வெங்கட் பிரபுவின் அடுத்த படம் தொடர்பாக வெளியாகியுள்ள செய்திகளுக்கு அவருடைய தரப்பு மறுப்பு தெரிவித்தது.

சென்னை 28, மங்காத்தா உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் இயக்குனர் வெங்கட்பிரபு. இவர் இயக்கத்தில் தற்போது ‘மாநாடு’ திரைப்படம் உருவாகி வருகிறது. சிம்பு நாயகனாக நடித்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அதே வேளையில் அசோக் செல்வனை வைத்து இயக்கியுள்ள மற்றொரு படத்தின் இறுதிக்கட்டப் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

இதனிடையே வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் அடுத்த படம் தொடர்பான செய்திகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதில் பிரபுதேவா மற்றும் அரவிந்த்சுவாமி இருவரும் இணைந்து நடிக்கவுள்ளதாகவும், சுதீப் வில்லனாக நடிக்கவுள்ளார் என்று செய்திகளில் குறிப்பிட்டுள்ளனர். இந்தப் படத்தினை நிதின் சத்யா தயாரிக்கவுள்ளார் என்றும் குறிப்பிட்டுள்ளார்கள்.

இந்தப் படம் ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்டவற்றில் வெளியிடத் திட்டமிட்டுள்ளார் எனவும் தெரிவித்துள்ளார்கள். இது தொடர்பாக வெங்கட் பிரபு தரப்பில் விசாரித்த போது அவர்கள் கூறியிருப்பதாவது,

“மாநாடு மற்றும் அசோக் செல்வன் நடிக்கும் படம் ஆகிய படங்களின் இறுதிக்கட்டப் பணிகளில் வெங்கட் பிரபு பிஸியாக இருக்கிறார். அவருடைய அடுத்த படத்துக்கான கதையை இப்போது தான் எழுதத் தொடங்கியுள்ளார். அது எழுதி முடித்தவுடன் தான் அதில் யார் நடிக்கிறார்கள் என்பது தெரியவரும். அதற்குள் பிரபுதேவா, அரவிந்த்சுவாமி, சுதீப் என வரும் செய்திகளில் எல்லாம் உண்மையில்லை”

இவ்வாறு வெங்கட் பிரபு தரப்பு தெரிவித்தது.

From around the web