ப சிதம்பரத்துக்கு ஜாமின் இல்லை… 5 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க சிபிஐக்கு அனுமதி!

டெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா பெரும் திருப்பங்களுடன் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்திராணி முகர்ஜி, பீட்டர் முகர்ஜி ஆகியோருக்கு சொந்தமானது இந்த ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம். 2007ம் ஆண்டு, மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது, ஐஎன்எக்ஸ் நிறுவனம் ரூ.305 கோடியை வெளிநாட்டிலிருந்து நிதியாகப் பெற்றுள்ளது. அந்த நிறுவனத்தின் தகுதிக்கு மீறிய முதலீடு இது. இந்தத் தொகையைப் பெறுவதில் முறைகேடு நடந்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த முறைகேட்டில் ப சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரம் நேரடியாகவே சம்பந்தப்பட்டு, கைதாகி இப்போது
 

டெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா பெரும் திருப்பங்களுடன் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்திராணி முகர்ஜி, பீட்டர் முகர்ஜி ஆகியோருக்கு சொந்தமானது இந்த ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம்.

2007ம் ஆண்டு, மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது, ஐஎன்எக்ஸ் நிறுவனம் ரூ.305 கோடியை வெளிநாட்டிலிருந்து நிதியாகப் பெற்றுள்ளது. அந்த நிறுவனத்தின் தகுதிக்கு மீறிய முதலீடு இது. இந்தத் தொகையைப் பெறுவதில் முறைகேடு நடந்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த முறைகேட்டில் ப சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரம் நேரடியாகவே சம்பந்தப்பட்டு, கைதாகி இப்போது ஜாமினில் வந்துள்ளார். ஆனால் இந்த முறைகேட்டுக்கு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி ப சிதம்பரம் உதவினார் என்ற குற்றச்சாட்டில்தான் ப சிதம்பரம் சிக்கியுள்ளார்.

கடந்த 14 மாதங்களாக ப சிதம்பரத்தை கைது செய்ய டெல்லி உயர் நீதிமன்றம் தடை விதித்து இருந்தது. இந்த நிலையில் நேற்று முதல்நாள் நீதிமன்றம் இவருக்கு முன்ஜாமினை ரத்து செய்தது.

அதன்பின் நேற்று உச்ச நீதிமன்றத்தில் ப. சிதம்பரம் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். ஆனால் அதை அவசர வழக்காக விசாரிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. நாளை காலைதான் இந்த வழக்கை விசாரிப்போம் என்று உச்ச நீதிமன்றம் கூறிவிட்டது. இந்த நிலையில் நேற்று முதல் நாள் மாலையில் இருந்து 24 மணி நேரமாக சிபிஐ ப. சிதம்பரத்தை தேடி வந்தது.

இந்த நிலையில் நேற்று இரவு ப. சிதம்பரம் காங்கிரஸ் தலைமையகத்தில் செய்தியாளர்களை சந்தித்துவிட்டு டெல்லியில் உள்ள தன்னுடைய வீட்டிற்கு சென்றார். அவரை தேடி வந்த சிபிஐ உடனடியாக அங்கு சென்றது. அதன்பின் அவருடைய வீட்டிற்கு சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக சென்று மதில் சுவர் ஏறி உள்ளே குதித்தனர். 40 சிபிஐ அதிகாரிகள் உள்ளே சென்று ப. சிதம்பரத்தை கைது செய்தனர். அதன்பின் இரவோடு இரவாக ப. சிதம்பரம் டெல்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவ சோதனை செய்யப்பட்டது. இன்று மதியம் வரை அவர் வெளியே வரவில்லை. பின்னர் டெல்லியில் உள்ள ரோஸ் அவென்யூ சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் ஆஜர்படுத்தப்பட்டார்.

இந்த வழங்கில் ப. சிதம்பரம் சார்பில் காங்கிரஸ் கட்சியின் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜரானார். அரசு சார்பில் சொலிஸ்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜரானார். இதில் சிபிஐ தரப்பில் ப சிதம்பரத்தை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் இந்த வழக்கில் ஜாமின் அளிக்க வேண்டும் என்று ப. சிதம்பரம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனால் இரு தரப்பிற்கும் இடையில் பரபர வாதம் நடந்தது.

“எங்கள் விசாரணைக்கு ப. சிதம்பரம் ஒத்துழைக்கவில்லை. அதனால் அவருக்கு ஜாமீன் வழங்க கூடாது. எங்களின் எந்த கேள்விக்கும் ப சிதம்பரம் பதில் அளிக்கவில்லை. அவர் எங்களிடம் எதுவுமே பேசவில்லை. பேசாமல் இருப்பது அடிப்படை சுதந்திரமாக இருக்கலாம். ஆனால் அவர் வழக்கு விசாரணைக்கு எதிராக செயல்படுகிறார். சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரித்தால்தான் வழக்கில் முன்னேற்றம் ஏற்படும். ஐஎன்எக்ஸ் கூட்டு சதியில் ப.சிதம்பரத்திற்கு பங்கு உண்டு. ஐஎன்எக்ஸ் குற்றப் பத்திரிக்கையில் விரைவில் ப சிதம்பரம் பெயர் சேர்க்கப்படும், என்று சிபிஐ தரப்பு வாதம் செய்தது.

ப சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர் கபில் சிபல், “ஐஎன்எக்ஸ் வழக்கில் ஏற்கனவே கார்த்தி சிதம்பரம் பெயில் பெற்றுள்ளார்.ஐஎன்எக்ஸ் வழக்கில் மூன்று பேர் பெயிலில் வெளியே இருக்கிறார்கள். ஐஎன்எக்ஸ் முறைகேட்டில் ஏற்கனவே விசாரணை முடிந்துவிட்டது. அதனால் இந்த வழக்கில் காவல் விசாரணை தேவையில்லை. ப சிதம்பரத்திற்கு இந்த வழக்கில் நேரடியாக தொடர்பு எதுவும் இல்லை. ப சிதம்பரம் நிதி அமைச்சராக கையெழுத்து மட்டுமே போட்டார். இந்த வழக்கில் ப சிதம்பரம் மட்டுமே குறி வைக்கப்படுகிறார். அந்நிய முதலீட்டு மேம்பட்டு வாரியத்தில் உள்ளவர்கள்தான் இதற்கு அனுமதி அளித்தனர். ஆனால் அதில் யாருமே விசாரணை செய்யப்படவில்லை. ஒரே ஒரு நாள் மட்டுமே சிதம்பரத்திடம் விசாரணை செய்தார்கள். விசாரிக்கும் தேவை இருந்தால் எப்போது வேண்டுமானாலும் அவரை அழைத்திருக்கலாம். சிபிஐ அழைப்பை சிதம்பரம் எப்போதும் நிராகரித்ததில்லை. சி.பி.ஐ கூறுவதெல்லாம் வேதவாக்கு அல்ல, 2018 ஜூன் மாதம் நடந்த விசாரணை புத்தகத்தை சமர்ப்பியுங்கள், ஒத்துழைப்பு தந்தாரா இல்லையா என பார்க்கலாம்.

ப சிதம்பரத்திடம் கேட்ட கேள்விகளை வேண்டும் என்றே மீண்டும் மீண்டும் கேட்டனர். அவர் ஏற்கனவே இதற்கெல்லாம் பதில் அளித்துவிட்டார். வேண்டும் என்றே இப்படி அவரை தொந்தரவு செய்துள்ளனர். ப சிதம்பரத்திடம் 12 கேள்விகள் மட்டுமே கேட்டுள்ளார்கள். அதுவும் 12 மணி வரை யோசித்து இந்த கேள்விகளை கேட்டுள்ளனர். அனைத்து கேள்விக்கும் ப சிதம்பரம் இதுவரை பதில் சொல்லியுள்ளார். ஆதாரமே இல்லாமல் அவரை சிபிஐ தரப்பு கைது செய்துள்ளது. நேற்று சிபிஐ சிதம்பரத்திடம் கேட்ட கேள்விகளுக்கும் அவருக்கும் எந்த தொடர்பும் இல்லை,” என்றார்.

சிதம்பரத்தின் மற்றொரு வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி வாதிடுகையில், “ப சிதம்பரத்தின் இடைக்கால முன் ஜாமினை 7 மாதம் கழித்து ரத்து செய்தது ஏன்? இந்திராணி முகர்ஜி வாக்குமூலம் கொடுத்து 4 மாதம் கழித்தே விசாரணை தொடங்கியது. அதன்பின்பே ப. சிதம்பரம் விசாரணைக்கு அழைக்கப்பட்டார்,” என்றார்.

இதையடுத்து இரண்டு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி அஜய் குமார் 30 நிமிடம் கழித்து தனது உத்தரவை பிறப்பித்தார். அதில், ப சிதம்பரத்தை வரும் ஆகஸ்ட் 26 வரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அவரின் ஜாமின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இதனால் இந்த மாதம் 26ம் தேதி வரை ப சிதம்பரம் சிபிஐ மூலம் காவலில் வைத்து விசாரிக்கப்படுவார்.

சிபிஐ காவலில் செல்லும் முன் 30 நிமிடம் ப. சிதம்பரம் தனது குடும்பத்தினரை சந்திக்க அனுமதிக்கப்படுவார்.

From around the web