பாஜகவுக்கு மரண பயம் காட்டிய மாயாவதி – அகிலேஷ் கூட்டணி!

உபியில் தொடங்கிய பாஜகவின் தோல்விப் பயணம்… தொடருமா? சமாஜ்வாடி- பகுஜன் சமாஜ்’ கூட்டணியை குறைத்து மதிப்பிட்டுவிட்டோம். அதுதான் உபி இடைத் தேர்தல் தோல்விக்கு முக்கிய காரணம்”. -இது உபி முதல்வர், அடுத்த மோடி என வர்ணிக்கப்படும் யோகி ஆதித்யநாத் அளித்துள்ள வாக்குமூலம். உபி இடைத்தேர்தலில் இன்று பாஜக மண்ணைக் கவ்வக் காரணம், மாயாவதியின் பகுஜன் சமாஜ் – அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சிகளின் புதிய கூட்டணிதான். கடந்த இரு தேர்தல்களிலும் முஸ்லிம்கள், தாழ்த்தப்பட்ட மக்கள், பிற்படுத்தப்பட்டவர்களின் வாக்குகளைச்
 

உபியில் தொடங்கிய பாஜகவின் தோல்விப் பயணம்… தொடருமா?

மாஜ்வாடி- பகுஜன் சமாஜ்’ கூட்டணியை குறைத்து மதிப்பிட்டுவிட்டோம். அதுதான் உபி இடைத் தேர்தல் தோல்விக்கு முக்கிய காரணம்”.

-இது உபி முதல்வர், அடுத்த மோடி என வர்ணிக்கப்படும் யோகி ஆதித்யநாத் அளித்துள்ள வாக்குமூலம்.

உபி இடைத்தேர்தலில் இன்று பாஜக மண்ணைக் கவ்வக் காரணம், மாயாவதியின் பகுஜன் சமாஜ் – அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சிகளின் புதிய கூட்டணிதான்.

கடந்த இரு தேர்தல்களிலும் முஸ்லிம்கள், தாழ்த்தப்பட்ட மக்கள், பிற்படுத்தப்பட்டவர்களின் வாக்குகளைச் சிதறும்படி செய்துவிட்டு, சாதி இந்துக்களின் வாக்குகளை மட்டும் குறிவைத்து களமிறங்கி வெற்றியைக் கைப்பற்றியது பாஜக. ஆனால் பிரிந்து கிடந்த மாயாவதியும் அகிலேஷ் யாதவும் இப்போது கைகோர்த்துக் கொண்டார்கள். சத்தமில்லாமல் காங்கிரஸும் இந்த அணிக்கு மறைமுக ஆதரவைத் தந்துள்ளது. அதன் விளைவுதான் இந்த இடைத் தேர்தல் முடிவுகள்.

இதனை நன்கு உணர்ந்துள்ளார் அகிலேஷ் யாதவ். மாயாவதியின் கூட்டணி இல்லாமல் இந்த வெற்றி சாத்தியமில்லை. வரும் பொதுத் தேர்தலிலும் இந்தக் கூட்டணி தொடரும் என்கிறார் அகிலேஷ். சமாஜ்வாடி கட்சியின் தலைவர்களும் எம்பிக்களும் மாயாவதியைத் தேடிப் போய் அவரது ஆதரவுக்கு நன்றி கூறி வருகின்றனர்.

வரும் மக்களவைத் தேர்தலைப் பொறுத்தவரை, பாஜகவுக்கு அத்தனை சாதாரண ஒன்றாக இருக்கப் போவதில்லை. காரணம், மாநிலங்களில் வலிமையாக உள்ள கட்சிகள் + காங்கிரஸ் கட்சி ஓரணியில் இணைவதற்கான தருணம் கைகூடி வருகிறது. ஏதோ ஒரு குறைந்தபட்ச செயல்திட்டத்தின் அடிப்படையில் இந்த மெகா கூட்டணியை அமைக்க சோனியா காந்தி தீவிரம் காட்டி வருகிறார். ‘இன்னொரு முறை மோடி தலைமையில் ஆட்சி அமைந்தால் ஆண்டவனாலும் இந்த தேசத்தைக் காப்பாற்ற முடியாது என்ற உண்மை புரிந்ததால் வந்த உத்வேகம் இது’ என்கிறார்கள் எதிர்க்கட்சித் தலைவர்கள்.

பாஜகவுக்கு மரண பயம் காட்டிய மாயாவதி – அகிலேஷ் கூட்டணி!

பீகாரைப் பொறுத்தவரை நிதீஷ்குமாரின் ஆட்சிக்கு விழுந்துள்ள அடியும் சாமானியமானதல்ல. அங்கு வலிமையான தலைவர் லாலு பிரசாத் சிறையில் இருக்கிறார். அவரது ராஷ்ட்ரிய ஜனதா தளம் அவ்வளவுதான், லாலுவின் மகன் தேஜஸ்வி ‘பச்சா’ என்று கணக்குப் போட்டவர்கள் விழி பிதுங்கி நிற்கிறார்கள். 28 வயது தேஜஸ்வி யாதவ், தன் தந்தையிடம் கற்ற வித்தைகளை நேரம் பார்த்து நிதீஷ்குமார் அரசுக்கு எதிராக செயல்படுத்தி வென்றுள்ளார். நிதீஷுக்கு நிச்சயம் ராத்தூக்கம் இருக்காது. லாலுவின் தயவில் ஆட்சிக்கு வந்தவர் நிதீஷ். இத்தனைக்கும் லாலு கட்சிக்குதான் அதிக எம்எல்ஏக்கள். இருந்தாலும் தேஜஸ்வியை துணை முதல்வராக்கினார் லாலு. ஆனால் அவரை அந்தப் பதவியிலிருந்து நேரம் பார்த்து துரத்தினார் நிதீஷ், பின் வாசல் வழியாக பாஜகவுடன் கைகோர்த்தார். அவரது இந்த அரசியல் சந்தர்ப்பவாதத்துக்குக் கிடைத்த பரிசாகவே இடைத் தேர்தல் தோல்விகளைப் பார்க்கிறது அரசியல் வட்டாராம்.

மக்களவைத் தேர்தல் முடிவுகளை உபியும் பீகாரும்தான் தீர்மானிக்கும் என்பார்கள். அங்கே அதிக இடங்களில் வென்றால் நாட்டின் தலைமைப் பதவி கைக்கு வந்துவிடும் என்பது ஒரு கணக்கு. அது பெரும்பாலும் பொய்த்ததில்லை. ‘இன்று பாஜகவின் தோல்விப் பயணம் உபி, பீகாரிலிருந்து தொடங்கியிருக்கிறது. நாடு நலம் பெற அந்தப் பயணம் தொடரட்டும்!’ என்பது மமதா பானர்ஜி உள்ளிட்ட தலைவர்களின் கருத்தாக உள்ளது. தேசத்தின் கருத்தாகவும் அது மாறுமா… பார்க்கலாம்!

-முதன்மை ஆசிரியர்
வணக்கம்இந்தியா
vanakkamindia@gmail.com

From around the web