அசுரன்… ஒரு பாசக்கார தெக்கத்தி தகப்பன்!

”யப்பா சவுதியா இருக்கு.. ஏன் தண்ணியிலே கூட்டிட்டுப் போற” “நீ செஞ்ச காரியத்துக்கு…” இப்படி ஒரு வாய்க்காலுக்குள் அப்பாவுக்கும் மகனுக்குமான உரையாடலுடன் படம் தொடங்குகிறது. சவுதி என்றவுடனேயே அங்கே நெல்லைத் தமிழுடன் அந்தக் தெக்கத்தி கலாச்சாரமும் டக்குன்னு நெஞ்சுக்குள்ளே வந்து உக்காந்துடுது. 15 வயது மகனுடன் நீண்டதூர நடைக்குப் பிறகு, ”அம்ம சோறு கொடுத்துருக்கா” என்று துணியில் கட்டியிருக்கும் சோற்றுப் பொட்டலத்தை நீட்டுகிறாரே. அப்போது தொடங்கி கடைசியில் சிறை செல்வதற்கு முன்னால் ஒரு புன்னகையுடன் விடை பெறுகிறாரே
 

அசுரன்… ஒரு பாசக்கார தெக்கத்தி தகப்பன்!

”யப்பா சவுதியா இருக்கு.. ஏன் தண்ணியிலே கூட்டிட்டுப் போற”

“நீ செஞ்ச காரியத்துக்கு…”

இப்படி ஒரு வாய்க்காலுக்குள் அப்பாவுக்கும் மகனுக்குமான உரையாடலுடன் படம் தொடங்குகிறது. சவுதி என்றவுடனேயே அங்கே நெல்லைத் தமிழுடன் அந்தக் தெக்கத்தி கலாச்சாரமும் டக்குன்னு நெஞ்சுக்குள்ளே வந்து உக்காந்துடுது. 

15 வயது மகனுடன் நீண்டதூர நடைக்குப் பிறகு, ”அம்ம சோறு கொடுத்துருக்கா” என்று துணியில் கட்டியிருக்கும் சோற்றுப் பொட்டலத்தை நீட்டுகிறாரே. அப்போது தொடங்கி கடைசியில் சிறை செல்வதற்கு முன்னால் ஒரு புன்னகையுடன் விடை பெறுகிறாரே அது வரையிலும் தென்பாண்டிச் சீமையின் தகப்பனாக தனுஷ் வாழ்ந்துள்ளார்.

அந்த 15 வயது மகனை அடிக்கொருதரம் செலம்பரம் என்று கைநீட்டி அடிக்கும் போது பார்க்கும் நமக்கே “யோவ் நீரு சும்மா இருமய்யா” என்று வாய் வரைக்கும் வார்த்தைகள் வந்து விடுகிறது. அடிவாங்கும் மகன் திருப்பிக் கேட்கும் ஒவ்வொரு சுளீர் கேள்விகளுக்கும் பதில் சொல்ல முடியாமல் பம்முகிறாரே அப்போது, “அடச் சொல்லித் தொலையுமய்யா.. ஏன் இப்படி அநியாயத்துக்கு நல்லவரா இருக்கீரு” என்ற கேள்வியும் எழுகிறது.

ஒவ்வொரு தடவையும், நீதிக்காகப் பேசி அடிதடி ஊர் வம்புடன் வீடு திரும்பும் மகனைக் கண்டு பதறுவதிலும், பாசத்தைக் கொட்டுவதிலும் மனிதர் பின்னிப் பெடலெடுத்துள்ளார். மனைவியுடன் காட்டும் இயல்பான அன்னியோன்யம், மனைவி மஞ்சுவாரியார் அவ்வப்போது இடித்துரைக்கும் பாசம், அந்த பிஞ்சுப் பெண் குழந்தை, தாய்மாமன் பசுபதி, செவலை நாய் என பார்க்கும் போது, ”ஏம்பா இந்தக் குடும்பத்துக்கு இத்தனை சோதனை.. நிம்மதியா வாழவிடலாம்லே” என்ற ஏக்கப் பெருமூச்சு எழுகிறது.

அத்தனை சாதுவாக இருக்கும் சிவசாமி, மூத்தமகனைத் தேடி வரும் போது “முருவா.. முருவா” என்று அடித்தொண்டையிலிருந்து அலறிக் கூப்பிடும் போதும், இரண்டாமவனை வில்லனின் ஆட்கள் கொல்ல முயலும் போது பொங்கி எழுகிறாரே, அங்கே வெறித்தனமான அசுரனாக வெளிப்படுகிறார். ஒரு மகனைக் காக்க போராடும் தந்தை இப்படித் தான் இருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது.

அசுரத்தனமும் பெருமிதமும்

அப்பாவின் அசுரத்தனைத்தைப் பார்த்து, அது வரையிலும் அவரை திட்டித் தீர்த்துக் கொண்டிருந்த செலம்பரத்திற்கு ஏற்படும் பெருமிதமும், அதன் பின்னால் உள்ள ஃப்ளாஷ்பேக்கும் அருமை. இளவயதில் ஏற்பட்ட இழப்புகள் மீண்டும் நேரக்கூடாது என்று ஒதுங்கி வாழும் ஒருவன், தனது பிள்ளைகளுக்காக எதுவரையிலும் செல்லுவான் என்பது தான் ஒற்றை வரிக்கதை. ஆனால்.. அதை படமாக்கிய விதமும் திரைக்கதையும், அத்தனை வீச்சரிவாள் காட்சிகளையும் மறந்து மனதில் சம்மணம் போட்டு உட்கார்ந்து விடுகிறது.

தலையில் செருப்பு, ஊரார் காலில் விழுவது போன்ற அவலங்களைக் கடந்து தான் தமிழ்ச் சமூகம் இன்றைய நிலைக்கு வந்துள்ளது என்பதை வாட்ஸ் அப் தலைமுறை உணரவேண்டும். 15 வயது விடலைப் பையனுக்கு நேர்ந்தவற்றையே ”வெக்கை” நாவலாக எழுதியுள்ளதாக எழுத்தாளர் பூமணி கூறியுள்ளார். அதை முழுமையாக படம் எடுக்க முடியாமல் பாதிக்கும் குறைவாகவே படமாக்கியுள்ளேன் என்று இயக்குனர் வெற்றி மாறன் தெரிவித்துள்ளார்.

எந்த ஒரு சாதிப்பெயரையும் சுட்டிக்காட்டாமல் ஒடுக்குபவர்கள், ஒடுக்கப்படுபவர்களுக்கு இடையேயான பிரச்சனை, அடுத்த தலைமுறை இளைஞர்களிடம் எப்படியெல்லாம் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை, கதையுடன் ஒன்றிப்போக வைத்து, தெரியப் படுத்தியுள்ளார் வெற்றி மாறன்.

நெல்லைத் தமிழை சரியாகப் பேசி அந்த மக்களோடு மக்களாக ஒன்றிப்போக வைத்தப் படங்களில் சிறந்த படமாக அசுரன் அமையும். வசனகர்த்தா சுகா, வெற்றிமாறனுக்கும், தனுஷ் உள்ளிட்ட அனைத்துக் கலைஞர்களுக்கும் அதில் பெரும் பங்கு உண்டு. இசை, ஒளிப்பதிவு, சண்டைப் பயிற்சி என அனைத்து துறையினரும் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளார்கள்.

உலகெங்கும் வசிக்கும் ஒவ்வொரு தெக்கத்தி இளைஞனுக்குள்ளும், தங்கள் தெக்கத்தி தகப்பன்மார்களை நினைவு கூறுவான் அசுரன். செலம்பரம் வாங்கியது போல் தாங்கள் வாங்கிய அடிகளும், பாசத் தருணங்களும் சேர்ந்தே உடன் நெஞ்சில் பசுமையாக வரும்.

-ஆதவன்

From around the web