பெல்ஜியத்தில் ஒரே நேரத்தில் 2 வகையான கொரோனா பாதிக்கப்பட்ட பெண் உயிரிழப்பு!

 

பெல்ஜியத்தில் 90 வயது பெண்மணி ஒரே நேரத்தில் இரண்டு வகை மரபணு மாற்ற வைரசுகளால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த தகவல் வெளியாகி உள்ளது.

சீனாவின் உகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. பெல்ஜியத்தில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 10.9 லட்சத்தை கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 10.4 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.  மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், பெல்ஜியத்தில் 90 வயது பெண்மணி ஒரே நேரத்தில் இரண்டு வகை மரபணு மாற்ற வைரசுகளால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த தகவல் வெளியாகி உள்ளது.

மரணமடைந்த பெண்மணி தடுப்பூசி போடாதவர் என்றும் தொற்று உறுதியான அன்றே அவர் கொரொனாவுக்கு பலியாகி விட்டதாகவும் பெல்ஜிய சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பிட்ட பெண்மணியை பிரிட்டனில் முதலில் காணப்பட்ட ஆல்பா வைரசும், தென்னாப்பிரிக்காவில் காணப்பட்ட பீட்டா வைரசும் தொற்றியது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இரண்டு வெவ்வேறு நபர்களிடம் இருந்து அவருக்கு நோய் தொற்று பரவியிருக்கலாம் என இந்த சம்பவம் தொடர்பாக பிரசுரிக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு வைரசுகளால் ஒரு நபருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது இதுவே முதன்முறை என்றாலும், அவர் உடனடியாக உயிரிழந்ததற்கு இந்த இரட்டை வைரஸ் பாதிப்பு தான் காரணமா என தெரிவிக்கப்படவில்லை.

அங்கு மேலும் ஒருவர் இதே போன்ற இரட்டை வைரஸ் தொற்றுக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வருகிறார்.