ஏன் திருமணம் செய்து கொள்ள வேண்டும்...? மலாலா கேள்வி... பாகிஸ்தானில் புயலைக் கிளப்பியது!!

 

எதற்காக திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று பாகிஸ்தானின் வீரமங்கை மலாலா யூசுப்ஜாய் கேள்வி எழுப்பியுள்ளார்.

பயங்கரவாதிகளின் மனித உரிமை மீறலுக்கு எதிராகவும் பெண் கல்விக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்து  வந்த மலாலா யூசுப்சாய் மீது  கடந்த 2012-ம் ஆண்டு  தலீபான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த சிறுமி மலாலா, லண்டனில் உயர் சிகிச்சைக்கு பிறகு நலம் பெற்றார். பெண் கல்விக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்த மலாலா யூசுப்சாய்க்கு கடந்த 2014-ம் ஆண்டு சமாதானத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. 17 வயதில் மலாலா இந்த விருதை பெற்றார்.

அண்மையில் மலாலா பிரிட்டன் பத்திரிகையான வோக் அட்டையில் மலாலா இடம் பெற்றார். அந்தப் படம் வைரலாகப் பரவியது. அந்த இதழுக்கு அளித்த பேட்டியில் இதுவரை பேசாத தமது தனிப்பட்ட வாழ்க்கையின் பல கேள்விகளுக்கு மலாலா பதிலளித்துள்ளார்.

அதில் திருமணம் குறித்த கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வாழ்க்கையில் ஆண் துணை வேண்டுமானால் அதற்கு திருமண பேப்பர்களில் கையெழுத்துப் போட வேண்டிய அவசியமில்லை என்று மலாலா கூறியுள்ளார்.

மலாலாவின் இந்த கருத்துக்கள் பழமைவாத பாகிஸ்தானின் சமூக ஊடகங்களில் புயலை கிளப்பி இருக்கிறது. இஸ்லாமின் கொள்கைகளுக்கு எதிரான மலாலா, "பொறுப்பற்ற" அறிக்கைகளால் இளைஞர்களின் மனதை சிதைக்க முயற்சிப்பதாக பலர் குற்றம் சாட்டியுள்ளனர்.

"மேற்கத்திய கலாச்சாரத்தை" நகலெடுக்கிறார் மலாலா என்றும் திட்டித் தீர்க்கின்றனர். புனிதமான திருமணத்தின் புனிதமான விதிகளைப் பற்றி எதிர்மறையான கருத்துக்களைப் பரப்பியதற்காக சமூக ஆர்வலர் குற்றம் சாட்டினார்.