கிரீன் கார்டு வழங்கும் பணி விரைவுபடுத்தப்படும் - வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் அறிவிப்பு

 

கிரீன் கார்டு வழங்கும் பணி விரைவுபடுத்தப்படும் என்று வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் ஜென் சக்கி தெரிவித்துள்ளார்.

கிரீன் கார்டு அல்லது நிரந்தர குடியேற்ற அட்டை எனப்படுவது அமெரிக்காவில் நிரந்தரமாக வசிக்கும் சலுகை அளிக்கப்பட்டதற்கான ஆதாரமாக, அமெரிக்காவிற்கு குடியேறியவர்களுக்கு வழங்கப்படும் ஒரு ஆவணம் ஆகும். அமெரிக்காவில் வெளிநாட்டினர் நிரந்தரமாக தங்குவதற்கு இந்த கிரீன் கார்டு எனப்படும் ஆவணத்தைப் பெற வேண்டும்.

அமெரிக்காவில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் இந்தியர்கள் பலர் ‘எச்-1 பி’ விசா பெற்று, பணியாற்றி வருகின்றனர். இவர்களில் பலர் கிரீன் கார்டு கேட்டு விண்ணப்பித்து காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் ஜென் சக்கி இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில், கிரீன் கார்டு வழங்குவதில் தாமதம் ஏற்படுவதால் உலகம் முழுதும் உள்ள திறமை மிக்க பணியாளர்களை பயன்படுத்திக் கொள்வது தடைபட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் அமெரிக்காவில் டிரம்ப் ஆட்சியில் கிரீன் கார்டு வழங்குவதில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் இப்போது நீக்கப்பட்டு விட்டதாக குறிப்பிட்ட அவர், கிரீன் கார்டு வழங்குவதில் தாமதத்தை தவிர்க்க வேண்டும் என அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார் என்றும் இனி கிரீன் கார்டு வழங்கும் பணி விரைவுபடுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.