நைஜீரியாவில் ட்விட்டர் நிறுவனத்திற்கு தடை; அதிரடி நடவடிக்கைக்கான காரணம் என்ன?

 

பிரபல சமூக வலைதளமான ட்விட்டரை நைஜீரியா தடை செய்துள்ளது.

ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் அதிபர் முகம்மது புஹாரி, டிவிட்டர் பாரபட்சமான முறையில் செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாகவே நைஜீரியாவில், பிரிவினைவாதிகளின் தூண்டுதலின் பேரில் அரசுக்கு எதிராக பொதுமக்கள் பல்வேறு நகரங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், அங்கு உள்நாட்டுப் போர் வெடிக்கும் சூழ்நிலை நிலவி வருகிறது.

இந்நிலையில், அதிபர் புஹாரி ட்விட்டரில், “இன்று போராட்டத்தில் கலந்து கொண்டுள்ள பலருக்கு, நைஜீரியாவின் உள்நாட்டுப் போரின் போது ஏற்பட்ட அழிவு மற்றும் உயிர் இழப்புகள் குறித்த விழிப்புணர்வோ, புரிதலோ இல்லை. 30 மாதங்களாக போராட்டத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில், ஈடுபப்ட்டு வரும் அதிகாரிகள் பலர், இந்த உள்நாட்டு போரைச் சந்தித்தவர்கள், அதனால் பாதிக்கப்பட்டவர்கள். அதனால் தான்,  பிரிவினைவாதிகளுக்கு புரியும் மொழியில் நாங்கள் பாடம் நடத்துகிறோம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்” என ட்வீட் செய்திருந்தார்.

அதிபரின் இந்த ட்வீட், சமூக ஊடக தளத்தின் கொள்கையை மீறுவதாக உள்ளது என குற்றம் சாட்டிய ட்விட்டர் தவறான நடத்தை என கூறி, அந்த பதிவை அகற்றியதோடு, அவரது ட்விட்டர் கணக்கை 12 மணி நேரம் தடை செய்தது.

சர்வாதிகார போக்குடன் செயல்படும் ட்விட்டரின் செயல்பாட்டினால் கடுப்பான, அதிபர் புஹாரி, எங்கள் நாட்டை எப்படி நடத்துவது என்பதற்கு எங்களுக்கு பாடம் நடத்த தேவையில்லை தனது ட்விட்டர் பதிவு நீக்கப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நைஜீரியாவில் ட்விட்டர் செயல்பாட்டிற்கு தடை விதித்துள்ளார். தங்கள் நாட்டில் ட்விட்டர் இயங்க காலவரையறையற்ற தடை விதிக்கப்படுவதாக நைஜீரிய அரசு நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இதனைத் தொடர்ந்து இந்திய வலைதளமான கூ இந்தியா நிறுவனம் நைஜீரியாவில் கால் பதிக்க முயன்று வருவதாக கூ நிறுவனத்தின் இணை நிறுவனர் அப்ரமேயா ராதாகிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

மேலும் நைஜீரியாவில் உள்ள உள்ளூர் மொழிகளில் தகவல் பரிமாறும் வசதி குறித்து பரிசீலித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். இதேபோல் இந்தியாவிலும் ட்விட்டருக்கும், ஒன்றிய அரசுக்கும் இடையே நடக்கும் பிரச்னையில் பாஜகவைச் சேர்ந்த பல அமைச்சர் கூ வலைதளத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.