இந்திய புகைப்பட செய்தியாளர் மரணத்திற்கும், தங்களுக்கும் தொடர்பு இல்லை!! தலீபான்கள் மறுப்பால் சர்ச்சை

 

இந்தியாவை சேர்ந்த புகைப்பட செய்தியாளர் மரணத்திற்கும், தங்களுக்கும் தொடர்பு இல்லை என தலீபான்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான் நாட்டில் அதிபர் அஷ்ரப் கனி தலைமையிலான ஆளும் அரசுக்கு எதிரான தாக்குதலில் தலீபான் பயங்கரவாதிகள் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை ஒடுக்க அரசு ராணுவ வீரர்களை பயன்படுத்தி வருகிறது. தலீபான்களை அடக்குவதற்காக ராணுவம் தாக்குதல் நடத்துவதும், ராணுவத்தினர் மீது தலீபான்கள் வெடிகுண்டு தாக்குதல்கள் நிகழ்த்துவதும் அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது.

இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் கந்தகாரில் நடந்த தலீபான்களுக்கு எதிரான போரில், இந்தியாவை சேர்ந்த ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவன புகைப்பட செய்தியாளர் தனிஷ் சித்திக் நேற்று முன்தினம் மரணம் அடைந்துள்ளார். அவரது மறைவுக்கு ஆப்கானிஸ்தான் அதிபர் உள்பட பல தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில், கொரோனா 2-வது அலையின்போது கங்கை நதிக்கரையில் பிணங்கள் எரிக்கப்பட்டது, ரோஹிங்கியா முஸ்லிம்களின் துயர வாழ்வு குறித்து இவர் எடுத்த புகைப்படங்கள் குறிப்பிடத்தக்கவை.

ரோஹிங்கியாக்களின் துயர வாழ்வு பற்றி பதிவு செய்ததற்காக புலிட்சர் விருது பெற்றவர். உலகம் முழுவதும் இவரது மறைவு பெரும் சோகம் ஏற்படுத்தி உள்ளது. பத்திரிகையாளர்கள் சங்கம் இதுபற்றி விசாரணை நடத்த கோரியுள்ளது.

இந்நிலையில் புகைப்பட செய்தியாளர் தனிஷ் சித்திக்கின் மரணத்தில் தங்கள் பங்கு எதுவும் இல்லை எனவும், அவர் உயிரிழக்க நாங்கள் காரணமில்லை எனவும் தலீபான்கள் தெரிவித்துள்ளனர்.

இரு தரப்பினர் இடையே நடந்த துப்பாக்கிச்சூட்டில் அவர் எப்படி உயிரிழந்துள்ளார் என்று தங்களுக்கு தெரியாது என அந்த அமைப்பின் செய்தி தொடர்பாளர் சபியுல்லா முஜாகித் தெரிவித்துள்ளார்.

போர்க்களத்திற்கு வரும் பத்திரிகையாளர்கள் தங்களிடம் முன்கூட்டியே அதுபற்றி தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும், அவ்வாறு தெரிவித்தால் அவர்களை பத்திரமாக பார்த்து கொள்வோம் எனவும் அவர் கூறியுள்ளார். இதனால், ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படையினருடன் செய்தி சேகரிக்க சென்ற சித்திக்கின் மரணத்தில் ஏற்பட்ட சர்ச்சை தொடர்ந்து நீடித்து வருகிறது.