இன்னும் கொரோனாவே முடியல... அதுக்குள்ள சீனாவில் புதிய ஹெச்10என்3 பறவைக்காய்ச்சல்!!

 

சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் 41 வயதான நபர் ஒருவருக்கு ஹெச்10என்3 பறவைக்காய்ச்சல் பாதிப்பு உறுதியாகியுள்ளது.

உலக நாடுகளை உலுக்கி வரும் கொரோனா வைரஸ் முதன் முதலாக 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவில் தான் கண்டறியப்பட்டது. இந்த வைரசின் பிடியில் இருந்து உலகம் இன்னும் மீளாத நிலையில், சீனாவில்  எச்10என்3 என்ற புதிய வகை பறவைக் காய்ச்சல் மனிதரை பாதித்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

சீனாவின் ஜியாங்சு நகரில் வசிக்கும் 41 வயதான ஒருவர், காய்ச்சல் மற்றும் பிற அறிகுறிகளுடன் கடந்த ஏப்ரல் 28-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து, மே 28-ம் தேதியன்று அன்று அவருக்கு ‘ஹெச்10என்3 என்ற புதிய வகை பறவைக் காய்ச்சல் (ஏவியன் இன்ஃப்ளூயன்ஸா) வைரஸ்’ இருப்பது கண்டறியப்பட்டது.

உலகிலேயே இந்த வைரஸ் பாதித்த முதல் நபராக அவர் கருதப்படுகிறார். எனினும்,அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு உடல்நிலை சரியாகி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். ஆனால் அவர் எவ்வாறு வைரஸால் பாதிக்கப்பட்டார் என்பது குறித்த விவரங்கள் தெரியவில்லை.

அவரது நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களை மருத்துவ ஆய்வு செய்ததில் அவர்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை என்று உறுதியானது.

இதனைதொடர்ந்து, இந்த ஹெச்10என்3 வைரஸானது,குறைந்த அளவே பாதிப்பு ஏற்படுத்தும் ஒரு நோய்க்கிருமி என்றும், இது கோழிகளின் மூலம் பரவும் வைரஸின் திரிபு மற்றும் அது பெரிய அளவில் பரவுவதற்கான வாய்ப்பு இல்லை என்றும் சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.